`மேக்கேதாட்டூ அணை பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்' என பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்த நிலையில், `பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று சொல்வது தற்கொலைக்குச் சமம்' என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் கொடுத்திருக்கிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டூ அணையை எப்படியும் கட்டியேத் தீரவேண்டும் என விடாப்பிடியாக முயற்சி செய்துவருகிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. இந்த நிலையில், கடந்த ஜூலை 29-ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ``மேக்கேதாட்டூ அணை கட்டுவது சம்பந்தமாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், தமிழ்நாடு அரசு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இருப்பினும் மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மேக்கேதாட்டூ அணையை கட்டி முடித்துவிடுவோம்!" என்றார்.
மேலும், ``மேக்கேதாட்டூவில் அணை கட்டுவது கர்நாடகாவின் உரிமை. ஆனால், தமிழ்நாடு அரசு தேவையில்லாமல் பிரச்னை கிளப்பிவருகிறது. கர்நாடகா திறந்துவிடும் காவிரி உபரி நீரால் மேட்டூர் அணை நிரம்பிவிடுகிறது, மற்ற உபரிநீர் அனைத்தும் கடலுக்குச் சென்றுவிடுகிறது. இதுவே மேக்கேதாட்டூவில் அணை கட்டினால் அந்த உபரிநீரையும் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம். பெங்களூருக்கு குடிநீர் கொண்டுசெல்லலாம். அதேசமயம் நீர் பற்றாக்குறை காலத்தில் தமிழ்நாட்டுக்கும் திறந்துவிடலாம். இது கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கும் பயன்படும். ஆனால், அரசியல் செய்வதற்காக தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது!" என அக்கரையாக(!) குற்றம்சாட்டினார்.
அந்த நிலையில், மேக்கேதாட்டூ அணை தொடர்பாக கர்நாடக துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், பிரதமர் மோடி, ``இந்த விவகாரத்தில் மத்திய அரசால் தலையிட முடியாது. நீங்கள் தமிழ்நாடு அரசுடன் கலந்துபேசி பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துவிட்டதாகத் கர்நாடக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், ``மேக்கேதாட்டூ அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா தயாராக இல்லை!" என்று திட்டவட்டமாகக் கூறினார். ஏற்கெனவே முதலமைச்சர் சித்தராமையாவுடன் நாற்காலி மோதலில் இருந்துவரும் சிவக்குமார், அவரின் பேச்சுக்கு மாற்றாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதை விமர்சனம் செய்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``மேக்கேதாட்டூ அணை தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் துணை முதலமைச்சர் சிவக்குமார், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாங்கள் தயாராக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தி.மு.க அரசு, தமிழக விவசாயிகளின் நலன்களைத் தாரைவார்த்ததன் விளைவு, இன்று, மேக்கேதாட்டூ அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தக்கூட தமிழக அரசை மதிக்காமல் செயல்படுகிறது கர்நாடக காங்கிரஸ் கட்சி. கர்நாடக காங்கிரஸ் அரசு அவமானப்படுத்தியிருப்பது தி.மு.க என்ற கட்சியை அல்ல. காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்படுவது தி.மு.க.விற்குப் புதிதும் அல்ல. ஆனால், ஒட்டுமொத்த தமிழக மக்களையும், விவசாயிகளையும் மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு!" எனக் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான பதிலடி கொடுத்திருக்கிறார். ``கர்நாடக அரசு எவ்வளவு முயன்றாலும் மேக்கேதாட்டூ அணையை நாங்கள் கட்ட விட மாட்டோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிலோ `மேக்கேதாட்டூ' என்ற ஒரு வார்த்தையே இல்லாதபோது, இந்த விவகாரம் குறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது மத்திய அரசின் தூண்டுதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழ்நாட்டுக்கு எதிராகவே உள்ளது. மேட்டூர் அணையின் உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என வழக்குப் போட்டுவிட்டு, உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!" எனத் தெரிவித்தார்.
மேலும், ``மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் 38 முறை பேசியும் எந்தவிதமான சுமுக முடிவும் எட்டப்படாத நிலையிலேயே காவிரி நடுவர் மன்றத்திற்குச் சென்றோம். அப்போது வி.பி.சிங் `எனக்காக ஒருமுறை பேசிப் பாருங்கள்' என்று சொன்னார். நேரடியாகவே பட்டேலும் கலைஞரும் அன்றைய பிரதமர் தேவகௌடா முன்னிலையில் கர்நாடகா இல்லத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் தீர்வு எட்டப்படவில்லை. ஆகவே, பேச்சுவார்த்தையால் இந்தப் பிரச்னை தீராது என்ற முடிவை மத்திய அரசுக்கு அறிவித்த பிறகுதான், `இனி வேறு வழியில்லை... காவிரி நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிடுகிறேன்' என வி.பி.சிங் சொன்னார். நாங்கள் இப்போது உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம். இந்த நிலையில் மறுபடியும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் போனால் என்னவாகும்... ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தமிழ்நாடு அரசுடன் பேசித் தீர்த்துக்கொள்கிறோம் என டிஃபன்ஸ் அடிப்பார்கள். நீதிமன்றமும் சரி பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி, வழக்கை முடித்து வைத்து அனுப்பிவிடும். அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே மாட்டார்கள். ஆகவே, பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தற்கொலைக்குச் சமம்!" என்று துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/VoqFB57
0 Comments