தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன. மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், பதிவுசெய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் ஜூன் 1-ம் தேதி கைது செய்தனர். இந்த சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பது, மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து கொண்டுசெல்வது, மீனவர்களைத் தாக்குவது, துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை படுகொலை செய்வது போன்ற அராஜகங்களில் இலங்கை கடற்படையினர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள் என்பது மீனவர்களின் நீண்ட கால குற்றச்சாட்டு. எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்று காரணம் சொல்லித்தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
ராமேஸ்வரத்திலிருந்து மூன்று விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்கள் ஒரு வாரத்துக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்ததாக 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, ‘14 நாள்களில் 61 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இன்னொரு நாட்டுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசு தான். ஆனால், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய மோடி அரசு எந்தவித அக்கறையும் காண்பிக்கவில்லை என்று ம.தி.மு.க உள்பட பல அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
தமிழக மீனவர்களுக்காக நீண்டகாலம் குரல் கொடுத்துவரும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற 10 ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 3,076 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலின்போது தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ‘தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைது நடவடிக்கைகள் பா.ஜ.க ஆட்சியில்தான் அதிகரித்திருக்கின்றன. விஸ்வகுரு என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் பிரதமர் மோடி, தமிழக மீனவர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பைக்கூ எடுத்துப்போடவில்லை’ என்று குற்றம்சாட்டினார்.
தற்போது அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், ‘தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் மீனவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையிலிருந்த கொண்டுவருவதற்கு மீட்புப்படகுகள், பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், அடிப்படைத் தேவைகளை வழங்கிவிடவும் அனுமதி தர வேண்டுமென்று தமிழக மீனவர் சங்கங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மேலும், பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்னையை தேர்தல் நேர முழக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் , தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் என முதல்வர் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியும், பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்களும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
மேலும், ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் இறங்கவிருக்கிறார்கள். அத்துடன், ஜூன் 5-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் மீனவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ‘தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்யுங்கள் என்று விஸ்வகுரு சொன்னால் இலங்கை ஜனாதிபதியும், இலங்கை பிரதமரும் கேட்க மாட்டார்களா? இந்த விவகாரத்தில் மோடி அரசு ஏன் மௌனம் காக்கிறது?’ என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கும் பதில் ஏதும் இல்லை.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/EVnCvUx
0 Comments