மருத்துவமனையில் செந்தில் பாலாஜி... விறுவிறு நிலையில் வழக்குகள்! - நடப்பது என்ன?!

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி:

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கைது செய்து ஒரு ஆண்டுகளைக் கடந்த நிலையில் தற்போது வரை சிறையிலிருந்து வருகிறார். 49-வது முறை அவரின் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டிருக்கிறது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி

இந்த சூழலில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டுப் பதிவுக்காகச் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவருகிறார்கள்.

வழக்கு விசாரணை:

மருத்துவமனையில் சிகிச்சை ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இன்னொரு புறம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடந்துவருகிறது. அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கச் சொல்லி செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்திருந்த மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுப் பதிவு செய்யவேண்டும் என்று கூறி நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார்.

செந்தில் பாலாஜி

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால், செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகவில்லை. இதனால், வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 29-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார் நீதிபதி அல்லி. இதுவொருபுறமிருக்க, வழக்கில் தன்னை விடுவிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் குற்றச்சாட்டுப் பதிவு செய்வதைத் தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜாமீன் மனு:

சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடக்க, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா மற்றும் ஏ.ஜி. மஸி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகினார். நீதிமன்றத்தில் வாதிடும்போது, "செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகிறது. உடல்நிலை தொடர்ந்து மோசமாகிறது. இருதய அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டார்கள். அமலாக்கத்துறை என்ன விசாரிக்கிறார்கள், எப்போது விசாரிப்பார்கள் என்பது எதுவுமே தெரியவில்லை. அவர்கள் எப்போது விசாரித்து முடிப்பார்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்" என்று காரசாரமாக வாதிட்டிருந்தார்.

செந்தில் பாலாஜி

இந்தநிலையில் அமலாக்கத்துறை தரப்பில் வாதாடுவதற்கு அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 24-ம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதோடு ஆறுக்கும் மேற்பட்ட முறை அமலாக்கத்துறை தரப்பில் வாதாடுவதற்கு அவகாசம் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாளை விசாரணைக்கு வரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு, மற்றும் அமலாக்கத்துறை தரப்பின் வாதங்களும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/ba94TMi

Post a Comment

0 Comments