மக்களவையில் ‘சாதி’ குறித்த மோதல்... அனுராக் தாக்கூர் பேச்சும் ராகுல் கொந்தளிப்பும்!

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தொடர்ந்து பேசிவருகிறார். பட்ஜெட் மீதான விவாதத்தின்போதும், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்பினார்.

அனுராக் தாக்கூர்

இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி-யான அனுராக் தாக்கூர் மக்களவையில் பேசியபோது, ‘ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது.’ என்றவர், ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கும் விதமாக ஆட்சேபகரமான கருத்து ஒன்றையும் தெரிவித்தார்,

அனுராக் தாக்கூரின் பேச்சால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. சாதி குறித்த அவரது கருத்துக்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுராக் தாக்கூர் பேச்சுக்கு ராகுல் காந்தி தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார். அப்போது, ‘என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம்.

ராகுல் காந்தி

ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நிறைவேற்ற வைக்கும். பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்காகக் குரல் எழுப்பி போராடுபவர்களை அவமானப்படுத்துவது வாடிக்கையாக இருக்கிறது. ஆனாலும், என் போராட்டம் தொடரும்’ என்றார் ராகுல் காந்தி. மேலும், சாதியைக் குறிப்பிட்டு தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறிய ராகுல், அதற்காக அனுராக் தாக்கூரிடம் மன்னிப்பு கேட்கும்படி கோர மாட்டேன் என்றார்.

அதன் தொடர்ச்சியாக சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் பேசினார். அப்போது, ‘அனுராக் தாக்கூர் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். நான் அவரிடம் ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்படி சாதி பற்றி கேட்க முடியும்... சாதியைப் பற்றி கேட்டுத்தான் பாருங்கள்’ என்றார்.

அகிலேஷ் யாதவ்

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து, சாதி குறித்த அனுராக் தாக்கூரின் கருத்து அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக, அவையை வழிநடத்திய ஜகதாம்பிகா பால் அறிவித்தார்.

ஆனால், அனுராக் தாக்கூரின் அந்தப் பேச்சை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். பிரதமர் மோடி தன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆற்றல் மிக்க என் இளம் நண்பரான அனுராக் தாக்கூரின் பேச்சை அவசியம் கேட்க வேண்டும். அற்புதமான முறையில் நையாண்டியுடன் உண்மையைக் கலந்து, ‘இந்தியா’ கூட்டணியின் கறைபடிந்த அரசியலை அம்பலப்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நரேந்திர மோடி

பாஜக எம்பி அனுராக் தாக்குரின் உரையை பகிர்ந்ததற்காக பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது காங்கிரஸ். பஞ்சாப் முன்னாள் முதல்வரும், எம்.பியுமான சரண்ஜித் சிங் சன்னி, இது தொடர்பான நோட்டீஸை மக்களவைச் செயலாளரிடம் அளித்துள்ளார். அவர் தனது நோட்டீஸில், ``மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் பாஜக எம்.பி கூறிய பல ஆட்சேபகரமான கருத்துகள்’ மக்களவைத் தலைவரால் பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட பகுதிகள் அடங்கிய முழு வீடியோவின் லிங்க்கை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அதிர்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

சாதி குறித்த அனுராக் தாக்கூரின் பேச்சை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்திருக்கிறார். அவர் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில், ‘சாதி தெரியாதவர்கள் கணக்கெடுப்பு பற்றி பேசுவதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது இந்த நாட்டின் 80 சதவிகித மக்களின் கோரிக்கை. இப்போது நாட்டின் 80 சதவிகித மக்களும் நாடாளுமன்றத்தில் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இது, பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் நடந்ததா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அது தொடர்பான தரவுகளை நிதிஷ்குமார் தலைமையிலான அரசு வெளியிட்டது. அதிலிருந்து, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்தது. குறிப்பாக, ‘இந்தியா’ கூட்டணி அந்தக் கோரிக்கையை வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாகப் பேசிவந்தார்.

பிரியங்கா காந்தி

ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய பா.ஜ.க அரசு முன்வரவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவகாரத்தை ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய விவகாரமாக எழுப்பியதும், பா.ஜ.க-வுக்கு இடங்கள் குறைந்ததற்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்தக் கோபம் பா.ஜ.க-வினரிடம் இருப்பதன் வெளிப்பாடுதான், அனுராக் தாக்கூரின் பேச்சில் வெளிப்பட்டிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூர், பிறகு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சராகவும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

அனுராக் தாக்கூர்

தற்போது, ராகுலுக்கு எதிரான சாதி குறித்த அனுராக் தாக்கூரின் பேச்சை பிரதமர் மோடி சிலாகித்துப் பாராட்டியிருப்பதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் விவாதிக்கப்படுகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/GeHj528

Post a Comment

0 Comments