ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்கத் தடை நீக்கப்பட்டது சரியா? - ஒன் பை டூ

நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“இதில் என்ன தவறு இருக்கிறது... ஒருசில அமைப்புகளைப்போல ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் இந்தச் சமூகத்துக்கு எதிரான இயக்கம் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலிருந்தவர்கள் பா.ஜ.க-வுக்கு வந்திருக்கிறார்களே தவிர, ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் அரசியல் சார்ந்த அமைப்பு கிடையாது. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே இந்த தேசத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்திருக்கும் இயக்கம். அதேபோல, இந்த நாட்டின் எந்த மூலை, முடுக்கில் புயல், மழை, வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தாலும், களத்தில் மக்களுக்குத் தோளுடன் தோள் கொடுத்து உதவிக்கொண்டிருக்கிறது. நாட்டின் சமூக நீதியைப் பாதுகாக்க, இந்தியாவின் பண்பாடு, நாகரிகத்தைப் பாதுகாக்கத் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம். தொடங்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை சமுதாயப் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது. எங்கோ, யாரோ ஒருவர் பேசியதை வைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மதவாத அமைப்பு என்று சொல்வது ஏற்புடையதல்ல. அதேபோல, முன்பிருந்த சிலர் தங்களின் சுயநலத்துக்காகவும் அரசியலுக்காகவும் கையிலிருந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடைசெய்தனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மற்ற மதம், சாதி சார்ந்த இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது முற்றிலும் தவறு. இந்த அமைப்பு மக்களின் இயக்கமாக, குடும்பங்களின் இயக்கமாக இருப்பதால்தான் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நாடு முழுவதும் மக்களிடையே வேரூன்றி நிற்கிறது. எனவே, இந்த அமைப்பின் செயல்பாடுகளில் அரசு அதிகாரிகள் பங்கெடுப்பதில் என்ன தவறு?”

சிவ ஜெயராஜ்

சிவ ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“இது அப்பட்டமான அயோக்கியத்தனம்; ஒன்றிய அரசின் ஒரு சார்பு நிலையின் வெளிப்பாடு. ‘ஆர்.எஸ்.எஸ் அரசியல் சார்ந்த அமைப்பு இல்லை’ என்றால் அதைப் பற்றி யார், என்ன பேசினாலும் ஏன் பா.ஜ.க-வினர்கள் முட்டுக்கொடுக்க ஓடிவருகிறார்கள்... ஆர்.எஸ்.எஸ்., ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகளில் அரசு அதிகாரிகள் கலந்துகொள்ளக் கூடாது என்று தடை இருந்தது. தற்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் கலந்துகொள்ள மட்டுமே உத்தரவு வந்திருப்பதிலிருந்தே யதேச்சதிகார பா.ஜ.க அரசின் முகம் வெளிப்பட்டிருக்கிறது. தங்களிடமுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மதவாத அரசியலை வெளிப்படையாகவே முன்னெடுக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் பா.ஜ.க-வின் தாய்க் கழகம் என்பதை பா.ஜ.க-வில் இருப்பவர்களே தொடர்ந்து பேசிவருகிறார்கள். இந்தியாவில் பலமுறை தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். அந்த அமைப்பின் நீண்டகால அஜண்டாவைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றுவதன் தொடக்கமாகவே இந்த அறிவிப்பைப் பார்க்க முடிகிறது. இந்த அறிவிப்பின் மூலம், முன்பு திரைமறைவில் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்காகப் பணியாற்றிய அரசு அதிகாரிகள், தற்போது வெளிப்படையாகவே செயல் படுவார்கள். இப்போது வந்திருக்கும் அறிவிப்பைப்போலவே, மத்திய அரசு அதிகாரிகள் இறை மறுப்பு இயக்கங்களின் செயல்பாடுகளில் கலந்துகொள்வதை ஏற்றுக்கொள்வார்களா... எப்படி இதுவரை ஒன்றிய அரசின் மக்கள் விரோதத் திட்டங் களைத் தமிழக அரசு அனுமதிக்கவில்லையோ, அதேபோல இந்த அறிவிப்பையும் தளபதி ஸ்டாலின் தலைமையிலான சமூக நீதி அரசு ஒருபோதும் அனுமதிக்காது!”



from India News https://ift.tt/lrFfPMd

Post a Comment

0 Comments