கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கரூர் மாநகரப் பகுதியில் உள்ள இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் அலுவலகத்தில், நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, நாடு முழுவதும் எட்டு மொழிகளில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையில், ராகுல் காந்தி நீட் தேர்வை ரத்து செய்து அனிதா போன்ற மாணவிகளின் உயிரிழப்புகளை தடுக்க, முயற்சி எடுப்போம் என தெரிவித்திருந்தார். இதே போல, விரைவில் கூட உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் அனைவரும் சேர்ந்து வலுவாக, `நீட் தேர்வை(NEET) நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும்... நீட் தேர்வு முறைகேடுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும்’ என வலியுறுத்துவோம்.
அதேபோல், இரண்டாவதாக, ஒடிசா ரயில் விபத்து சம்பவத்திலிருந்து நாடு மீளாத சூழ்நிலையில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ரயில் விபத்து, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக, 10 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் நிர்வாக கோளாறு காரணமாக ரயில் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதில், கரூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று பயணிகளை ஏற்றி செல்லாது என ரயில்வே துறை தெரிவித்திருப்பது, கரூர் மாநகருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. தொடர்ச்சியாக, தமிழகத்தை புறக்கணித்து வரும் நரேந்திர மோடி அரசு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கரூர் மாநகருக்கு வழங்காமல் ஏமாற்றியது தற்பொழுது வந்தே பாரத் ரயில் கரூரில் நின்று செல்லாது என ரயில்வே நிர்வாகம் கூறுவதை கடுமையாக கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
ஆளுங்கட்சிக்கு இணையான எதிர்க்கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள். மக்களால் வெறுக்கப்படக்கூடிய அரசாங்கமாக மோடியின் அரசாங்கம் அமைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறேன். கரூர் மக்களின் நலனுக்காகவும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கின்றேன் இதே போல, அடுத்த ஐந்து ஆண்டுகள் மக்களுக்காக குரல் கொடுப்பேன்.
எந்தவித சமரசமும் இன்றி உறுதியோடு நரேந்திர மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மக்கள் பணியாற்றுவோம். கடந்த ஏப்ரல் மாதத்தில், இருந்து 100 நாள் வேலை வழங்காமல் நிறுத்தி வைக்கக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 100 நாள் வேலைத்திட்டம் குறித்தும் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குரல் கொடுப்போம்..
தேர்தல் என்றாலே சவாலான வேலை தான். 14 லட்சம் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தேன். எனக்கு எதிராக தேர்தலுக்கு முன்பு இருந்தே, தவறான செய்திகள் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டன. பொய் பிரசாரங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்களை சந்தித்து, வாக்கு சேகரித்ததால் இரண்டாவது முறையாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பணியாற்றுவதற்கு மக்கள் ஒரு லட்சத்து ஆறு ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளனர். அதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தியா கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கடுமையாக களப்பணியாற்றினர். எதிர் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில், களப்பணி செய்ததால் வெற்றி வாய்ப்பு சாத்தியமானது. கடந்த முறை எனது நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து கல்வி, பொது மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் நலம் சார்ந்த துறைகளுக்கு அதிக கவனம் செலுத்தினேன். கடந்த காலத்தில், கொரோனா ஊரடங்கு காரணமாக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்குவது தாமதமானது. ஆனால், இம்முறை விரைவில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கரூர் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் சிறப்பு கவனம் செலுத்தி வழங்கப்படும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/nYt8v9U
0 Comments