கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மதுரையில் செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, "இன்று கள்ளக்குறிச்சியில் 58 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளனர். இது போன்று தமிழக வரலாற்றில் நடந்தது கிடையாது.
சட்டத்துறை அமைச்சர் இதற்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கூறுகிறார். சடட்சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம் என்று முதல்வர் சொல்லியிருக்க வேண்டும். 58 பேர் இறந்த பின்னர்தான் கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். முதல்வர் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வரவில்லை.
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிவிட்டோம், அதோடு முடிந்து விட்டது என்கிறார் முதலமைச்சர். எங்களுக்கு சிபிஐ விசாரணை நடத்தியே ஆக வேண்டும். போலீஸார் இன்று சுதந்திரமாக வேலை செய்ய முடிகிறதா? காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. சட்ட ரீதியாக போராட்டம் நடத்துவோம். நீங்கள் அடக்குமுறையை கையாண்டால், அதிமுக தொண்டர்கள் தகர்த்து எறிவார்கள். உயிர் காக்கும் மருந்து, கள்ளச்சாராய முறிவுக்கு மருந்து கையிருப்பு இருக்கிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார். இந்த போராட்டம் ஒரு ட்ரையல்தான்.." என்றார்.
செல்லூர் ராஜூ பேசும்போது, "பொம்மை முதல்வர் உடனே பதவி விலக வேண்டும். சட்டசபையில் விவாதம் நடத்த பயந்து ஓடி ஒளிந்துள்ளார். இந்த ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த அரசு வந்த பின், சொன்னது ஒன்று செய்தது ஒன்றாகத்தான் உள்ளது. தூத்துக்குடி சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டவர்கள் இப்போது கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கூடாது என்கிறார்கள்.
திமுக அரசு அமைந்து மூன்றாண்டுகள் ஆகிறது, இதுவரை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டார்கள், நிர்வாகத் திறனில்லை. அனைத்து வகையிலும் இந்த அரசு தோற்றுள்ளது. அதனால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்றார்.
from India News https://ift.tt/TDqFN1f
0 Comments