ஓர் அரசாங்கம்... நலத்திட்டங்கள், தொழில் வளர்ச்சிகள், மாநில முன்னேற்றம் எனச் செயல்படுவதைவிட மிக மிக அடிப்படையானது... மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது. ஆனால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய செயற்கைப் பேரழிவால், தலைகுனிந்து நிற்கிறது `திராவிட மாடல்' தி.மு.க அரசு.
விளிம்புநிலை மக்களில் 55 பேரின் உயிர்கள் இதுவரை பறிக்கப்பட்டுள்ளன. பலரின் நிலை, கவலைக்கிடமாகவே இருக்கிறது. ஊரே சுடுகாடாகிக் கிடக்கிறது. கைம்பெண்களின், குழந்தைகளின், உறவுகளின் கதறல்களுக்கு என்ன நீதி? கள்ளச்சாராயக் கும்பல்களுக்கு `பங்காளி'யாகிப் போன மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பணியிடை நீக்கம்/இடமாற்றம் மட்டும்தான் தண்டனைகளா? துணைநின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு?
`டாஸ்மாக்கை மூடிவிட்டால் கள்ளச்சாராய மரணங்கள் பெருகும்’ என்கிற அரசின் வாதம், மிக கேவலமாக பல்லிளித்து நிற்கிறது. ஆட்சியைப் பிடிக்கும்போதெல்லாம் தி.மு.க -அ.தி.மு.க இரண்டும் மாறிமாறி ஆடும் சாராய ஆட்டக் கொடுமைகளுக்குத்தான், குடிகார மாநிலமாகத் தள்ளாடுகிறது தமிழகம். கல்வி, தொழில், மருத்துவம் போன்றவற்றில் `நான் முதல்வன்' என்று சொல்லிக் கொண்டால், அது பெருமை. `குடிப்பதிலும்' அப்படியே என்றால்?
குஜராத்தின் பொதுத்துறை பால் விற்பனை நிறுவனமான அமுல், நாடு முழுக்க பால் பொருள்களை விற்பனை செய்து 2022-23-ம் ஆண்டில் ஈட்டியிருக்கும் வருமானம் 55 ஆயிரம் கோடி ரூபாய். இது... ஆக்கபூர்வமான வளர்ச்சி.
மக்களைக் குடிகாரர்களாக மாற்றுவதற்காகவே தொடங்கப்பட்ட தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக், 2022-23-ம் ஆண்டில் ஈட்டியிருப்பது 45 ஆயிரம் கோடி ரூபாய். இது... கேடுகெட்ட வளர்ச்சி!
`டாஸ்மாக் வருமானத்தில்தானே மக்கள் நலத்திட்டங்களே நடக்கின்றன. அதை மூடிவிட்டால் எங்கே போவது?’
குடியால் சீரழியும் மனித வளத்தைப் பயன்படுத்தி அமுல் போல நம் ஆவின் நிறுவனத்தை வளர்த்தெடுத்தாலே.. டாஸ்மாக்கைவிட 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகக் கிடைக்குமே. மக்களின் நலனும் பல மடங்கு பெருகுமே.
அது முடியவில்லையா? `அரசாங்கம்' என்கிற பெயரில், மக்கள் பணத்தை சூறைத்தேங்காய் உடைப்பதை நிறுத்தினாலே போதும், உடனடி வருமானம் கொட்டுமே.
சிலைகள், மண்டபங்கள், ஆடம்பர விழாக்கள், உதவாக்கரைத் திட்டங்கள், ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள், அரசாங்க உயரதிகாரிகள் என பலருக்கும் புதுப்புது சொகுசு கார்கள், பெரும் பெரும் பங்களாக்கள், பராமரிக்க கோடி கோடியாக நிதி எனத் தேவையில்லாத ஆணிகளையெல்லாம் அகற்றினாலே பல ஆயிரம் கோடிகள் மிச்சமாகுமே.
பல லட்சம் கோடி வருமானத்தை அள்ளித் தரும் மணல், கிரானைட் உள்ளிட்ட இயற்கை வளங்களை சொற்ப காசுகளுக்குத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்தினாலே, பல லட்சம் கோடிகள் அரசு கஜானாவை நிறைக்குமே.
இதையெல்லாம் யோசிக்கக்கூட மனமில்லாமல், `நலத்திட்டங்கள்' என்கிற பெயரில் சாராய அரக்கன்களிடம் மக்களின் உயிர்களை அடகு வைப்பதற்கு பெயர் அரசு அல்ல... எமன்!
from India News https://ift.tt/QesE16d
0 Comments