சேலம்: கலைஞர், எம்.ஜி.ஆர் தங்கிய பங்களாவும்.. `பாழாகும்' பனமரத்துப்பட்டி ஏரியும்! - சீரமைக்கப்படுமா?

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய ஏரிகளில் பனமரத்துப்பட்டி ஏரியும் ஒன்று. மேட்டூர் அணைக்கு முன்பு பனமரத்துப்பட்டி ஏரியில் இருந்துதான் பம்ப் செய்யப்பட்டு, மாநகர பகுதிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் நாளடைவில் மேட்டூர் அணையில் இருந்து மாநகர பகுதிக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது. சுமார் 936 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனமரத்துப்பட்டி ஏரி, மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்தும், தற்போது எந்தவித பயன்பாடும் இல்லாமல் கிடந்து வருகிறது. சேலத்தில் அமைந்துள்ள ஏரிகளில் முக்கியமான ஏரி என்ற சிறப்பு அந்தஸ்து இதற்கு இருந்தாலும், அதையும் தாண்டி தமிழ் திரையுலகில் முக்கிய பங்கு வகித்த ஏரி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

அந்த காலத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட தமிழ் சினிமாக்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. முதலாளி, எங்க ஊர் ராசாத்தி, எதிர்வீட்டு ஜன்னல், புதிய தோரணங்கள், சட்டம் ஒரு இருட்டரை, நெடுஞ்சாலை என பல்வேறு தமிழ் சினிமாக்கள், இந்த ஏரியை காட்சியாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

பனமரத்துப்பட்டி ஏரி

இதற்காகவே அந்த காலத்தில் சினிமா எடுப்பதற்காக வருபவர்கள் தங்குவதற்கு பனமரத்துபட்டி ஏரி அருகே அடிக்கரை எனும் பகுதியில் பங்களா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில், கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் தங்கி திரைக்கதை, பாடல்கள் எழுதியுள்ளனர். ஆனால் தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த பங்களாவை, மாநகராட்சி கண்டும் காணாதவாறு இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

மேலும் இது குறித்து பனமரத்துப்பட்டி பகுதி மக்களிடம் பேசியபோது, “ஆங்கிலேயர் காலத்தில் 1911-ம் ஆண்டு கட்டப்பட்டது, இந்த பங்களா. இதனை டி.பி பங்களா என்று பெயரிட்டு அழைப்பார்கள். பின்னர் சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு தலைவர்கள் இதனை பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது இந்த பங்களா முன்புறம் வட்ட வடிவில் ஒரு பூச்செடி தோட்டம் இருக்கும். பங்களா ஜன்னல், கதவு எல்லாம் தேக்கு மரத்தால் செய்தது. மேலே குண்டு மின்விசிறி, மரக்கட்டில்கள் இருக்கும். அது எல்லாம் நாளடைவில் எங்கு போனது என்றே தெரியவில்லை. இதெல்லாம் பாதுகாக்க வேண்டிய நினைவுச் சின்னங்கள்... கண்டிப்பாக முதல்வர் ஸ்டாலின் ஐயாதான் இதனை மீட்டெடுக்கனும்” என்றனர்.

கலைஞர்- எம்.ஜி.ஆர் தங்கிய பங்களா!

இது தொடர்பாக பனமரத்துப்பட்டி ஏரி பாதுகாவலர் சரவணனிடம் பேசினோம், “எனது தாதா, தந்தை என தலைமுறை தலைமுறையாக இதே ஊரில் தான் குடியிருந்து வருகிறோம். தாத்தா, தந்தை இருவருமே  ஏரி பாதுகாவலராகத்தான் பணியாற்றினார்கள். எனக்கு விவரம் தெரிந்து கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் இந்த டி.பி பங்களாவில் தங்கி, கதை எழுதியுள்ளார்கள். மேலும், ஒரு முறை கதை எழுதி பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் நாடகம் நடித்து அதில் கிடைத்த பணத்தை, பள்ளிக் கட்டடம் கட்ட நிதியுதவி அளித்துவிட்டுச் சென்றனர். இன்றளவும் கலைஞரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்து கட்டிய பள்ளிக்கூடம் என்கிற பெருமை சந்தைப்பேட்டை அரசுப் பள்ளிக்கு இருந்து வருகிறது. அப்படிப்பட்ட பெரும் தலைவர்கள் தங்கி கதை, வசனம் எழுதிய பங்களா இன்று கேட்பாறற்று கிடக்கிறது. இதை சீரமைத்து நினைவுச்சின்னமாக வைத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

இது தொடர்பாக மேயர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, “நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப் படுறேன். இது தொடர்பாக தகவலை பெற்றுக்கொண்டு அதற்கு என்ன செய்யமுடியும் என்பதை கூறுகிறேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from India News https://ift.tt/QC5abmt

Post a Comment

0 Comments