சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கக்கூடிய ஊரக வளர்ச்சித்துறை கட்டடம் அருகே இருக்கின்ற தனியறையில், கணக்கில் வராத பணம் இருந்து வருவதாக ஜூ.வி-யில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை விஜிலென்ஸ் போலீஸார் அதிரடி சோதனனை செய்து பணத்தை கண்டெடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வரகூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சாலை ஒப்பந்த பணி மற்றும் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். தெற்கு மணி விழுந்தான் தலைவாசல் பகுதிகளில் 90 லட்சத்தில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்ட ஒப்பந்தத்திற்காக ஒப்பந்த தொகை 90 லட்சம் ஒதுக்கீடு செய்வதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை வரைபட அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோர் ஒரு சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும் எனக் கேட்டிருக்கின்றனர். இதற்கு ஒப்பந்ததாரர் செந்தில் 50,000 கொடுத்துள்ளார். மேலும் 61,000 வழங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்ததாரர் செந்தில், இது பற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். டி.எஸ்.பி கிருஷ்ணராஜ் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் ரசாயன பவுடர் தடவிய 61,000 ரூபாயை ஒப்பந்ததாரர் செந்திலிடம் அளித்தனர்.
நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் பொறியியல் பிரிவு அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை வரைபட அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோரிடம் 61,000 ரூபாயை செந்தில் அளித்தார். அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், அந்த அலுவலகத்தின் எதிரே உள்ள ’கட்டட மையம்’ அலுவலகத்தில் பணத்தை மறைத்து வைத்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த விஜிலென்ஸ் போலீஸார் கையும் களவுமாக உதவி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை வரைபட அலுவலர் ஆகியோரை மடக்கி பிடித்து கைதுசெய்தனர். அங்கு கிடங்கு அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்த ரசாயனம் தடவிய பணமும் கணக்கில் வராத 1,21,000 பணமும் பறிமுதல் செய்தனர்.
உயர் அதிகாரிக்கு பணம் கொடுக்க வாங்கி வைத்திருந்ததும் விஜிலென்ஸ் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து செயற்பொறியாளர் சேகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from India News https://ift.tt/tq2pV3x
0 Comments