திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று பேசினார். அப்போது அவர், "1967-ம் ஆண்டில் இருந்து 57 ஆண்டுகள் ஏமாந்தது போதும். தேர்தல்களின்போது தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும். காமராஜர் ஆட்சி மீண்டும் மலர நிர்வாகிகள் பாடுபட வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் நாம் காத்திருப்பது. 57 ஆண்டுகள் நாம் அமைதி காத்திருந்தோம்.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இனியும் நாம் அமைதியாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஒரு நொடிகூட இனி தாமதிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது?. ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தோம். அந்த நிலையை மீண்டும் நாம் ஏற்படுத்த வேண்டும். காமராஜர் ஆட்சி என்ற முழக்கத்தோடு அதனை சாத்தியப்படுத்த வேண்டும்" என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் 'தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்க வேண்டும்' என சொல்வது வழக்கம். இதை தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக பேசக்கூடிய விஷயம். ஆனால் உங்கள் கட்சி அந்த அளவுக்கு பலமாக இருக்கிறதா? கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பிற கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்கிறீர்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் கட்சியை வளர்க்க என்ன செய்தீர்கள். 1967-ம் ஆண்டு குறைந்த ஓட்டு தற்போது 5% தான் உங்களுக்கு ஓட்டு இருக்கிறது. இந்நேரம் ஒரு 30% அளவுக்கு வாக்கு வங்கியை கொண்டுவந்து இருக்க வேண்டும். அதை செய்யாமல் இருக்கிறீர்கள்.
எனவே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். ஆனால் அதற்கான கட்டமைப்பும் இல்லை. பலப்படுத்துவதற்கான வேலைகளும் நடக்கவில்லை. அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் முறையில் நிர்வாகிகளை நியமித்தால் மட்டுமே கட்டுக்கோப்பாக கட்சி வளரும். நியமன பதவிகள் இருப்பதுதான் கட்சி பலவீனமாக இருப்பதற்கு காரணம். 2006-ம் ஆண்டு திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது பாமக, காங்கிரஸ் கூட்டணியில்தான் ஆட்சி நடந்தது. அதுபோல் 2026-ம் ஆண்டு நடைபெறும் என செல்வப்பெருந்தகை எதிர்பார்க்கிறார். அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஒருவேளை நடந்தாலும் கூட அதிகாரத்தில் வேண்டுமானால் பங்கு பெறலாம். ஆனால் தனியாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். எனவே அவர்கள் கட்சியை முதலில் பலப்படுத்த வேண்டும்.
தெலங்கானாவை தனியாக பிரித்து கொடுத்தது காங்கிரஸ்தான். ஆனால் அதற்கான பலனை அனுபவித்து வந்தது பிஆர்எஸ். அதை தெலங்கானா மக்கள் புரிந்துகொண்டார்கள். மேலும் பிஆர்எஸ் ஊழலில் சிக்கியதால் மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்வு செய்தார்கள். வரும் காலத்தில் தெலங்கானாவில் காங்கிரஸ் Vs பாஜக என்றுதான் அங்கு போட்டி இருக்கும். பிற இடங்களில் மாநில கட்சிகள் குறுகிய காலம் மட்டுமே ஆட்சியில் இருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் திராவிட கட்சிகள் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். சமூக நீதி என்கிற கொள்கை பிடிப்புடன் இருக்கிறார்கள். எனவே தமிழகத்தில் மாநில கட்சிகளை மக்கள் தவிர்ப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான்" என்றார்.
இறுதியாக திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம், " 'தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்' என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பேற்று வருபவர்கள் வழக்கமாக பேசக்கூடிய ஒன்றுதான். அண்ணன்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி இதுபோல் பேசினார்கள். தற்போது அண்ணண் செல்வப்பெருந்தகை பேசி இருக்கிறார். எனவே இவரது பேச்சை வித்தியாசமாக ஏற்றுக்கொள்ள வேண்டியது இல்லை. இதுபோல் தலைவர்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக பேசுவது வழக்கம்" என்று முடித்து கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/EAU94qY
0 Comments