மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு தொடங்கி பல விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில், பிரதமர் மோடி மதரீதியில் மேற்கொள்ளும் வெறுப்புப் பிரசாரம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் என பல முனைகளிலிருந்தும் மோடியின் பிரசாரத்துக்கு கண்டனங்கள் எழுவதுடன், மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில்தான், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு, பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனம் ஆகியவை தொடர்பாக ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் இரு கட்சிகளின் தலைவரும் விளக்கம் அளிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அரசியலில், தேர்தல் களத்தில் எதிரெதிர் அணிகளில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் விமர்சித்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பேசுவதெல்லாம் மிகவும் ஆபத்தானது.
அந்த வகையில், நாட்டில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசினார்... குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிராகப் பேசினார்... நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பவர் பிரதமர் மோடி. இதுபோல ஓரிடத்தில் மட்டுமே பேசினார்... தெரியாமல் வாய்குளறிப் பேசிவிட்டார் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இத்தகைய கருத்துக்களைத் தொடர்ச்சியாக பேசிவருகிறார் பிரதமர் மோடி.
குறிப்பாக, முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பான இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தின்போதுதான் மதரீதியான பிரசாரம் என்ற ஆயுதத்தை பிரதமர் மோடி கையிலெடுக்க ஆரம்பித்தார். பா.ஜ.க-வுக்கு 370 இடங்கள் கிடைக்கும் என்று மோடி சொல்லிவந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு அதிக இடங்கள் கிடைக்காது என்ற பேச்சு எழுந்த நிலையில்தான், மோடி இவ்வாறு பேசத் தொடங்கினார் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் போல இருக்கிறது என்று முதலில் ஆரம்பித்து, ‘உங்கள் சொத்துக்களை எடுத்து முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்துவிடும்... சகோதரிகள், தாய்மார்களின் தாலியைக்கூட காங்கிரஸ் கட்சி விட்டுவைக்காது’ என்று பேசியது வரை பிரதமர் மோடியின் பேச்சு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை திருடர் என்று குறிப்பிட்டு பேசியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப் போட்டு, அந்த வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கியவுடன், அதை வைத்து உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பா.ஜ.க அரசு பறித்தது. அதோடு, அரசு இல்லத்திலிருந்து ராகுல் காந்தியை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள்.
அப்படியிருக்கும்போது, இந்திய மக்கள்தொகையில் 20 சதவிகிதம் இருக்கும் முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெற்றவர்கள் என்று இந்த நாட்டின் பிரதமர் பேசுவதை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. இப்படியாக, பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வந்ததைத் தொடர்ந்துதான் தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
‘கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?’ என்று கேட்கும் எதிர்க்கட்சிகள், ‘எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக மதரீதியில் பிரதமர் மோடி பேசியிருக்கும் நிலையில், அவர் மீது உடனடியாக ஏன் நடவடிக்கை இல்லை?’ என்று தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்புகின்றன.
பா.ஜ.க-வுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பாமல், காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ‘இது, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்கிறது என்று காட்டிக்கொள்வதற்காகவா?’ என்று எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/8JOSPQ0
0 Comments