2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. 7 கட்டங்களாக வரும் 1.6.2024 வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 4.6.2024 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இதில் ஒட்டுமொத்தமாக 1,618 வேட்பாளர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். அவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். அதாவது முதல்கட்ட தேர்தலில் 135 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக 76 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்று இருந்தனர்.
இதையடுத்து நடந்த இரண்டாவது கட்ட தேர்தலில் 100 பெண் வேட்பாளர்கள் தேர்தலை சந்தித்து இருக்கிறார்கள். அதில் அதிகபட்சமாக கேரளாவில் 24 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். அதிகபட்சமாக பா.ஜ.க 69 பெண் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் 44 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் திமுக - 3, காங்கிரஸ் - 2, அதிமுக - 1, பாமக - 2, பாஜக -3 பேர் பெண் வேட்பாளர்கள் களமிறங்கினார்கள். இதையடுத்து வேட்பாளர்கள் அறிவிப்பில் அரசியல் கட்சிகள் பாலின பாகுபாடு பார்ப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "தேர்தலில் வாக்களித்தவர்களில் ஆண்கள் 2.12 கோடி பேர்தான். அதேநேரத்தில் பெண்களின் எண்ணிக்கை 2.21 கோடியாக இருக்கிறது. எனவே சமூகத்தில் சரிசமமாக இருக்கும் பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் 50% பெண்களுக்கு வழங்கும் சட்டம் இருக்கிறது. எம்.எல்.ஏ, எம்.பி தேர்தலில் சட்ட திருத்தம் செய்வதன் மூலமாகத்தான் 50% கொண்டுவர முடியும். அதேநேரம் பெண்களுக்கு 33% வழங்கும் சட்டத்தை பா.ஜ.க அரசு அமலுக்கு கொண்டுவருவதாக சொன்னது. என்ன நினைத்தார்களோ தெரியவில்லை தொகுதி மறுவரைக்கு பிறகுதான் அமல்படுத்தப்படும் என சொல்லிவிட்டார்கள். எனவே அதை விரைந்து அமல்படுத்த வேண்டும்.
இதை அரசியல் கட்சிகள் கையில் ஒப்படைத்தால், அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். சிறுபான்மையின மக்களை எப்படி புறக்கணிக்கிறார்களோ அப்படித்தான் பெண்களையும் நடத்துவார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறோம் என சொல்வார்கள். சீட் கொடுக்கும் போது அப்படியே கைவிட்டு விடுவார்கள். பேச்சளவில்தான் பெண்கள் முன்னேற்றம் குறித்து அரசியல் கட்சிகள் பேசுவார்கள். சீட் கொடுக்கும் போது ஆண்களுக்குதான் முக்கியத்துவம் தருவார்கள். தி.மு.கவில் கூட மூன்று பேருக்குதான் சீட் கொடுத்து இருக்கிறார்கள். தமிழகம், புதுச்சேரியில் மொத்தமாக 40 தொகுதிகள் இருக்கின்றன. 50% என்றால் 20 பேருக்காவது சீட் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அதேநேரம் சீமான் 20 பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அந்த எண்ணம் இருப்பதால் அவர் பாராட்டுதலுக்கு உரியவர்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/47vuLDw
0 Comments