கேரளா: மின்வெட்டை கண்டித்து மக்கள் போராட்டம்; `வீட்டுக்கு 4 AC இருப்பதே காரணம்'- சொல்கிறார் அமைச்சர்

கேரள மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து பாலக்காடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருச்சூர், ஆலப்புழா, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 2-ம் தேதி வரை வெப்ப அலை அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோடைகாலத்தை முன்னிட்டு, வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஃபேன், ஏ.சி உள்ளிட்டவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் கே.எஸ்.இ.பி அலுவலகங்களின் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மின்சார வாரிய அலுவலகங்களுக்கு போன் செய்தால் போன் எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். கொச்சி பாலாரிவட்டம், ஆலுவா மற்றும் மலப்புறம் பகுதிகளில் கே.எஸ்.இ.பி அலுவலகங்களுக்கு முன்பு நடுராத்திரியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தலப்பாறை கே.எஸ்.இ.பி அலுவகத்தின் முன்பு தீப்பந்தங்களை ஏந்தி பொதுமக்கள் நள்ளிரவு போராட்டம் நடத்தினர். ஆலுவா தோட்டக்காட்டுகரை பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கே.எஸ்.இ.பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கொச்சி சேராநல்லூரில் கே.எஸ்.இ.பி அலுவலகத்தில் கரன்ட் பியூஸை பிடுங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மின்சார வாரிய அலுவலகம் முன் போராடிய மக்கள்

இது குறித்து கேரளா மின்சார வாரிய அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி கூறுகையில், "மின்சாரம் பயன்படுத்துவதில் பொதுமக்கள் சுயமாகவே கட்டுப்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பு ஒரு வீட்டில் ஒரு ஏ.சி இருந்தது, இப்போது நான்கு ஏ.சி-கள் உள்ளன. பீக் டைமில் அதிக மின்சாரம் உபயோகிக்கப்படுகிறது. கேரளாவில் மின்சார பயன்படு 16 மடங்கு அதிகரித்துள்ளது. பயன்பாடு அதிகரிக்கும்போது டிரான்ஸ்பார்மர் ட்ரிப் ஆகிறது. மின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. 20% மின்சாரம் மட்டுமே கேரளாவில் உற்பத்தி ஆகிறது 

கேரள மின்சாரத்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி

மீதமுள்ள மின்சாரம் வெளியில் விலைக்கு வாங்கப்படுகிறது. ஒரு நாள் மின்சாரத்துக்காக 15 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. மின்சார உற்பத்திக்காக மிகப்பெரிய திட்டங்கள் கொண்டு வருவதற்கு கேரளாவில் யாரும் ஒத்துழைப்பதில்லை. கேரளாவில் 3,000 டி.எம்.சி தண்ணீர் இருந்தும் 300 டி.எம்.சி தண்ணீர் உபயோகித்துதான் மின்சாரம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ஜூன் மாதம் 10-ம் தேதிக்குள் மழை பெய்யாமல் இருந்தால் மின் தடை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்றார்.



from India News https://ift.tt/0ZvbLYH

Post a Comment

0 Comments