மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மனைவி சுனேத்ரா, நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பாராமதி தொகுதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் ரூ.25 ஆயிரம் கோடி மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2002-17ம் ஆண்டுக்கு இடையே மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி அரசியல்வாதிகளின் சர்க்கரை ஆலைகளுக்கு தாராளமாக கடன் வழங்கியது. மொத்தம் 25 ஆயிரம் கோடி வரை கடன் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த கடனை சர்க்கரை ஆலைகள் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் கடன் வாங்கிய சர்க்கரை ஆலைகளை வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து கடனை வசூலிக்க அவற்றை ஏலம் விட்டு வந்தது. சர்க்கரை ஆலையை இழந்த அரசியல்வாதிகளே ஏலத்தில் அதே சர்க்கரை ஆலையை குறைந்த விலையில் ஏலம் எடுத்தனர்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தனித்தனியாக விசாரித்து வந்தனர். இந்த ஊழலில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அவரது மனைவி சுனேத்ர பவார் மற்றும் சரத் பவாரின் உறவினர் ரோஹித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இப்போது இவ்வழக்கில் இருந்து சுனேத்ர பவார் மற்றும் ரோஹித் பவாரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விடுவித்துள்ளனர். மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று இருந்த ஜரந்தேஷ்வர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடந்த 2010-ம் ஆண்டு ஏலம் விட்டது.
ஏலத்தில் மும்பை அந்தேரியை சேர்ந்த குரு கமாடிட்டீஸ் சர்வீஸஸ் என்ற நிறுவனம் சர்க்கரை ஆலையை ரூ.65.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. குரு கமாடிட்டீஸ் நிறுவனம் சர்க்கரை ஆலையை ஏலத்தில் வாங்கி அதனை உடனே ஜரந்தேஷ்வர் சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கு நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு விட்டது. ஜரந்தேஷ்வர் சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனம் தொடங்கப்பட்டு இரண்டு வாரத்தில் அந்நிறுவனத்திடம் ஜரந்தேஷ்வர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிறுவனத்தை குரு கமாடிட்டீஸ் நிறுவனம் குத்தகைக்கு வழங்கியது. ஜரந்தேஷ்வர் சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்தில் தற்போதைய துணை முதல்வர் அஜித் பவாரின் உறவினர் ராஜேந்திர கட்கே இயக்குநராக இருந்தார். அஜித் பவார் குடும்பத்திற்கு சொந்தமான ஜெய் அக்ரோடெக் நிறுவனம் ஜரந்தேஷ்வர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை குத்தகைக்கு வாங்க ஜரந்தேஷ்வர் சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.20.03 கோடியை கொடுத்து இருந்தது.
இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,''ஜெய் அக்ரோடெக் நிறுவனம் ஜரந்தேஷ்வர் சர்க்கரை ஆலைக்கு ரூ.20.03 கோடி கொடுப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2008ம் ஆண்டு ஜூலை மாதமே ஜெய் அக்ரோடெக் நிறுவன இயக்குனர் பொறுப்பில் இருந்து சுனேத்ர பவார் விலகிவிட்டார். ஜெய் அக்ரோடெக் நிறுவனம் ஜரந்தேஷ்வர் நிறுவனத்திற்கு பணம் கொடுத்ததில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை. இந்த பரிவர்த்தனையால் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு எந்த வித இழப்பும் ஏற்படவில்லை'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அஜித் பவார், அவரின் மனைவி சுனேத்ரா மற்றும் ரோஹித் பவார் ஆகியோர் தொடர்புடைய இவ்வழக்கு விசாரணையை முடித்துக்கொள்வதாக கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. அமலாக்கப்பிரிவும் இவ்விவகாரத்தில் பணமோசடி வழக்கு பதிவு செய்துவிசாரித்தது. தற்போது அஜித் பவார் துணை முதல்வராகி இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக இவ்வழக்கை முடித்துக்கொள்வதாக பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
ஓய்வு பெற்ற மாவட்ட தலைமை நீதிபதி பண்டிட் ராவ் ஜாதவ் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இவ்வழக்கு விசாரணை முடித்துக்கொள்ளப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி சர்க்கரை ஆலைகளுக்கு கடன் கொடுத்தது, சர்க்கரை ஆலைகளை ஏலம் விட்டதில்அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டதாகவும், இதில் மாநில கூட்டுறவு வங்கிக்கு எந்த வித இழப்பும் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய ரோஹித் பவாரும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். போலீஸாரின் இந்த அறிக்கையை தொடர்ந்து பா.ஜ.க ஒரு வாஷிங் மெஷின் என்பது மீண்டும் நிரூபணமாகி இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/5dZjEAt
0 Comments