கிராமங்களில் ‘தும்பை விட்டு வாலைப் பிடித்த கதை...’ என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோலத்தான் நடந்திருக்கின்றன அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீபகால அரசியல் முடிவுகளெல்லாம். ஒரு விஷயத்தைக் கையிலிருக்கும்போது விட்டுவிட்டு, அது கைமீறிப் போன பின்பு அதன் வாலைப் பிடித்து ஓடுவதைப்போலத்தான் பல விஷயங்களில் முடிவெடுத்திருக்கிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, தான் எடுத்த வியூகங்களெல்லாம் சரியான பலனைக் கொடுக்காததால் கூட்டணி, தொகுதி, வேட்பாளர் தேர்வு எனக் கடைசி நேரத்தில் பல முடிவுகளை எடுத்திருக்கிறார் எடப்பாடி. அதுவும் பல தொகுதிகளில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
“அ.தி.மு.க கூட்டணிக்கு வரவேண்டிய கட்சிகளையெல்லாம் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது பா.ஜ.க. தவிர, பல ஸ்டார் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கி, ‘தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையேதான் களத்தில் போட்டியே...’ என நிறுவ முயல்கிறார்கள். இதையெல்லாம் ரொம்பவே லேட்டாகத்தான் புரிந்துகொண்டார் எடப்பாடி. திருச்சி பொதுக்கூட்டத்தில், முழுக்க முழுக்க தி.மு.க-வை எடப்பாடி தாக்கியதாக இருக்கட்டும், ‘நாட்டுக்கு வேண்டுமானால் மோடி ராஜாவாக இருக்கலாம். தமிழ்நாட்டில் அவர் கூஜாதான்’ என சி.வி.சண்முகம் ஓங்கி அடித்ததாக இருக்கட்டும்... தேர்தல் வியூகத்தை மாற்றி, இப்போது சுதாரித்து எழுந்திருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள் இலைக் கட்சியின் சீனியர் புள்ளிகள்.
“அ.தி.மு.க-வின் தேர்தல் வியூகம் என்ன... புதுமுகங்களைக் களமிறக்கியதற்கு ரியாக்ஷன் என்ன..?” களமிறங்கி விசாரித்தோம்!
புதுமுகங்களுக்கு வாய்ப்பு...
தொகுதிக்குள் ‘கடா முடா’!
அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர் பேசுகையில், “பா.ஜ.க-வுடனான கூட்டணி முறிவுக்குப் பின்னர், ‘ஒரு வலுவான கூட்டணியை அமைக்க முடியும்; தி.மு.க அணியிலிருந்து சில கட்சிகள் நம் பக்கம் வரும்’ என்று திடமாகவே நம்பினார் எடப்பாடி. ஆனால், பா.ஜ.க குறித்தும், மத்திய அரசு குறித்தும் எந்தவொரு விமர்சனத்தையும் ஆணித்தரமாக அவர் முன்வைக்காததால், பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகள் அ.தி.மு.க-வை நாடவில்லை. போதாக் குறைக்கு, கடைசி நிமிடம் வரையில் எங்களுடன் பேசிக்கொண்டிருந்த பா.ம.க., பா.ஜ.க-வுடன் கைகோத்தது. இதுதான் எடப்பாடியை ரொம்பவே யோசிக்கவைத்துவிட்டது.
கூட்டணி கை கொடுக்கவில்லை என்பதால், ‘வளமான’ வேட்பாளர்களைக் களமிறக்க முடிவெடுத்தார். சில தொகுதிகளில் எதிரணி வேட்பாளரைப் பொறுத்து, அவர்களுடன் மோதக்கூடிய தகுதியுடைய வேட்பாளர்களைத் தேர்வுசெய்தார். ஏற்கெனவே தயாராகியிருந்த வேட்பாளர் பட்டியலில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க போட்டியிடும் 33 நாடாளுமன்றத் தொகுதிகளில், தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தனைத் தவிர, மற்ற 32 பேருமே புதுமுகங்கள்தான்.
கோவையில், ஐடி விங் மண்டலச் செயலாளர் விக்னேஷ் என்பவரின் பெயர்தான் முதலில் ‘டிக்’ ஆகியிருந்தது. அந்தத் தொகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், அவருக்கு இணையாக, படித்த, பல மொழிகள் தெரிந்த ஒருவரை வேட்பாளராகக் களமிறக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஐஐடி பட்டதாரியான முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராசுவின் மகன் ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ராமச்சந்திரனின் முழுச் செலவையும் தலைமையே பார்த்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதியின் பொறுப்பாளராக வேலுமணி இருப்பதால், ராமச்சந்திரன் வேட்பாளரானதில் பெரிய முரண்பாடு வெடிக்கவில்லை. ஆனால், மற்ற ஏரியாக்களில், ஒரே ‘கடா முடா’ சத்தம்தான்.
உதாரணமாக, தூத்துக்குடி தொகுதிக்கு சிவசாமி வேலுமணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதனின் உறவினர். தூத்துக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டாலும், சென்னையில் எலும்பு முறிவுக் கட்டு மையம் நடத்திவரும் இவர், அ.தி.மு.க-வின் சென்னை தி.நகர் வடக்குப் பகுதிச் செயலாளராகவும் இருக்கிறார். தூத்துக்குடி தொகுதியில் ஓட்டுக்கூட இல்லாத நபரை, ‘வளமானவர்’ என்கிற அடிப்படையில் வேட்பாளராக்கியதில், கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு விருப்பமே இல்லை. ‘தி.மு.க-வின் கனிமொழி போன்ற ஸ்டார் வேட்பாளருக்கு எதிராக, அறிமுகம் இல்லாதவருக்கு வாய்ப்பு வழங்கலாமா...’ எனக் கொதிக்கிறார்கள். அந்தக் கடுப்பில்தான், சிவசாமி வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது, நிர்வாகிகள் பலரும் புறக்கணித்துவிட்டனர்.
“அம்மாவை எதிர்த்து நின்றவருக்கு வாய்ப்பா?”
கடைசி நேர முடிவுகள்!
திருநெல்வேலி வேட்பாளராக, தி.மு.க-வி லிருந்து சமீபத்தில் கட்சியில் இணைந்த சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதற்குக் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது. ‘2016 சட்டமன்றத் தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மாவை எதிர்த்து போட்டி யிட்டவர் சிம்லா. கட்சியில் சேர்ந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை, அவருக்கு வாய்ப்பா..?’ எனக் கொதித்துவிட்டார்கள் நிர்வாகிகள். போதாக்குறைக்கு, ‘எனக்குச் செலவு செய்வதாக இருந்தவர்கள் ஒதுங்கிக்கொண்டு விட்டார்கள். தலைமையே செலவு செய்ய முடியுமா..?’ எனத் தலைமையிடமே கொக்கி போட்டார் சிம்லா. அதன் பிறகுதான், கடைசி நேரத்தில் சிம்லாவை மாற்றிவிட்டு, ஜான்சி ராணியை வேட்பாளராக அறிவித்தது தலைமை. அதேபோல, விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக இருக்கும் ஜெயபெருமாள், ராமநாதபுரம் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். ‘ராமநாதபுரத்துல வேட்பாளரே கிடைக்கலையோ..?’ என லோக்கலில் அனல் கிளம்பியிருக்கிறது.
கிருஷ்ணகிரி தொகுதியைத் தன் மகன் சதீஷுக்காக எதிர்பார்த்திருந்தார் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி. ஆனால், ‘வாரிசு அரசியலை எதிர்த்து நாம பிரசாரம் செய்றோம். இந்தச் சூழல்ல உங்க பையனுக்கு சீட் கொடுத்தா நல்லா இருக்காது’ என மறுத்துவிட்டார் எடப்பாடி. இதில் முனுசாமி ரொம்பவே அப்செட். ‘முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷுக்கு நீலகிரி, முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராசுவின் மகன் ராமச்சந்திரனுக்கு கோவை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கு தென்சென்னை, முன்னாள் எம்.எல்.ஏ பவுன்ராஜின் மகன் பாபுவுக்கு மயிலாடுதுறை, முன்னாள் எம்.பி சவுந்திரத்தின் மகன் ஆற்றல் அசோக்குமாருக்கு ஈரோடு என ஐந்து வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. முனுசாமின்னா மட்டும் என்ன இளக்காரமா?’ என உஷ்ணமாகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இந்தக் கொதிப்பில்தான், கிருஷ்ணகிரி வேட்பாளர் ஜெயபிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்தபோது, முனுசாமி அவருடன் செல்லவே இல்லை.
மதுரை டு ராமநாதபுரம்... கட்சிக்குள் பதற்றம்!
மதுரையில், டாக்டர் சரவணனைக் கட்சிக்குள் கொண்டுவந்ததே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்தான். ஆனால், கட்சிக்குள் வந்ததும் முழுக்க முழுக்க செல்லூர் ராஜூவின் ஆதரவாளராக மாறிப்போனார் சரவணன். இதை உதயகுமாரும் ரசிக்கவில்லை. தவிர, தன்னிடம் கலந்தாலோசிக்காமல் சரவணனுக்கு மதுரையில் சீட் கொடுத்ததையும் உதயகுமாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் அப்செட்டில் இருப்பதை உணர்ந்துதான், மதுரை புறநகர் (மேற்கு) மாவட்டச் செயலாளரான அவரை, ராமநாத புரத்துக்கும் தேனிக்கும் பொறுப்பாளராக நியமித்தது தலைமை. ஆனாலும், மதுரை சூடு இன்னும் தணியவில்லை. கட்சிக்குள் பதற்றமும் குறையவில்லை.
தேனியில், முக்குலத்தோர் சமூக வாக்குகள்தான் அதிகம். அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களான தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க-விலும், டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க-விலும் வேட்பாளர்களாகக் களமிறங்கு கின்றனர். அந்தத் தொகுதியில், நாயுடு சமூகத்தினருக்குக் கணிசமான ஓட்டுகள் இருப்பதால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த நாராயணசாமியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் எடப்பாடி. ஓ.பன்னீர் செல்வத்தால் ஓரங்கட்டப்பட்டிருந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், அதே சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 2019 தேர்தலில் தேனியில் தோற்றதை எடப்பாடி நினைவில் கொள்ள வில்லை. இதுவும், தேனி அ.தி.மு.க-வில் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. பா.ஜ.க பிரிவுக்குப் பிறகு சிறுபான்மையினரின் காவலராகத் தன்னை அறிவித்துக்கொள்ளும் எடப்பாடி, தன் கட்சியிலிருந்து இஸ்லாமியர் ஒருவருக்குக்கூட வாய்ப்பளிக்கவில்லை என்கிற சர்ச்சையும் எழுந்திருக்கிறது.
இத்தனை சர்ச்சைகள், பதற்றம், ‘கடா முடா’ சத்தமெல்லாம் எதிரொலித்தாலும், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி, எல்லாச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை வேட்பாளர் தேர்வில் வழங்கியிருக்கிறார் எடப்பாடி. வன்னியருக்கு ஏழு, முக்குலத்தோருக்கு ஐந்து, வெள்ளாளக் கவுண்டருக்கு ஐந்து, பறையருக்கு ஐந்து, நாயுடுவுக்கு நான்கு, மீனவருக்கு இரண்டு, நாடாருக்கு இரண்டு, யாதவருக்கு இரண்டு, முதலியார், உடையார், அருந்ததியர், முத்தரையர், தேவேந்திர குல வேளாளர், ஆசாரி சமூகங்களுக்குத் தலா ஒரு தொகுதி எனப் பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார் எடப்பாடி. எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இஸ்லாமியர் ஒருவருக்கு திண்டுக்கல்லில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது” என்றனர் விரிவாகவே.
“அ.தி.மு.க Vs தி.மு.க
இதுவே களமாக இருக்க வேண்டும்...”
சுதாரித்த எடப்பாடி!
கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் சலசலப்பைக் கருத்தில்கொண்டுதான், கடந்த மார்ச் 22-ம் தேதி எம்.ஜி.ஆர் மாளிகையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், ரொம்பவும் காரசாரமாகவே பேசியிருக்கிறார் எடப்பாடி.
அது குறித்து அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் சிலர் பேசுகையில், “தொடக்கத்திலிருந்தே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய ஆர்வத்தை எடப்பாடி காட்டவில்லை. ‘டெல்லிக்கான தேர்தல் இது. நமக்குச் சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு...’ என நிர்வாகிகள் கூட்டத்தில் சொல்லிவந்தார். அதனால்தான், பா.ஜ.க எதிர்ப்பைக்கூட தீவிரமாகச் செய்யவில்லை அவர். அந்த வகையில்தான், கூட்டணி முதல் தேர்தல் வியூகங்கள் தொடர்பான அத்தனை சறுக்கல்களும் நடந்தன. நாங்கள் ஆக்டிவ்வாக இல்லாதது புரிந்தவுடன், தி.மு.க-வை ஓவராக அட்டாக் செய்து, தங்களுக்கும் தி.மு.க-வுக்கும் இடையேதான் போட்டி இருப்பதுபோல ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கத் தொடங்கிவிட்டது பா.ஜ.க. அந்த பிம்பத்துக்கு வலுசேர்க்கும்விதமாக, முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என ஸ்டார் வேட்பாளர்களையும் களமிறக்கிவிட்டனர். அதன் பிறகுதான் சுதாரித்தார் எடப்பாடி.
பா.ஜ.க-வை ஓங்கி அடிப்பதற்கும், தி.மு.க-விடம் களத்தில் முஷ்டியை முறுக்குவதற்கும் அதன் பிறகுதான் கிரீன் சிக்னல் கொடுத்தார். ‘தி.மு.க - அ.தி.மு.க இடையேதான் போட்டி. பா.ஜ.க-வுக்கு நான்கு சதவிகித ஓட்டுதான் இருக்கிறது. அவர்கள் படுபயங்கரமாக வேலை செய்து, 10 சதவிகித ஓட்டு வாங்கினால்கூட ஜெயிக்க முடியாது’ என வேலுமணி பேசியதாகட்டும், ‘பா.ஜ.க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது; ஏழைகளுக்கானது அல்ல’ என செல்லூர் ராஜூ பேசியதாகட்டும்... எல்லாமே இப்போது எடப்பாடி சுதாரித்து எடுத்த முடிவுகளால்தான். மார்ச் 22-ம் தேதி நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ‘களம் அ.தி.மு.க Vs தி.மு.க என்பதாகவே இருக்க வேண்டும். தி.மு.க-வை எதிர்க்கக்கூடிய வாய்ப்பு எந்த இடத்தில் வந்தாலும் நழுவ விட்டுவிடாதீர்கள்’ என்று தீர்க்கமாகவே சொன்னார்.
“என் முடிவுகள் கடுமையாக இருக்கும்!”
மேலும், ‘2 கோடி உறுப்பினர்களை வைத்திருக்கிறோம். அவர்கள் வாக்களித்தாலே போதும், பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றிவிடலாம். அம்மாவின் ஆசைப்படி, இரட்டை இலைச் சின்னம் அதிகமான இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரசாரம் முடிவதற்கு இன்னும் 20 நாள்களே இருக்கின்றன. கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மீண்டும் ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு உங்களையெல்லாம் அழைப்பேன். தொகுதிவாரியாக நாம் பெற்ற வாக்குகளை ஆய்வுசெய்வேன். எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லையென்றால், என் முடிவுகள் கடுமையாக இருக்கும்’ என தடாலடித்தார் எடப்பாடி.
இனி தி.மு.க எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, களத்தை அ.தி.மு.க Vs தி.மு.க எனத் திருப்புவதுதான் எங்களுடைய முதல் வேலை. வடசென்னையில், அமைச்சர் சேகர் பாபுவுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முரண்டு பிடித்து சண்டைபோட்டபோது, விஷயம் எடப்பாடியின் காதுக்குப் போனது. ‘விட்டுக் கொடுக்காதீங்கப்பா. நின்னு சண்டை செய்யுங்க...’ என்றிருக்கிறார் அவர். அதன் பிறகுதான், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ராஜேஷ், சேகர் பாபுவை இறங்கி விளாசியெடுத்தார். இதற்காக, எடப்பாடியிடமிருந்து பாராட்டும் கிடைத்தது.
திருச்சியில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், தி.மு.க-வை வார்த்தைகளால் புரட்டி எடுத்ததாக இருக்கட்டும், ‘நிர்வாகிகளுக்கு ஒரு பிரச்னையென்றால், உயிரையும் கொடுத்துக் காப்பாற்றுவேன்’ என அமலாக்கத்துறை ரெய்டால் சோர்ந்துபோயிருக்கும் சி.விஜயபாஸ்கருக்கு உற்சாகம் கொடுத்ததாக இருக்கட்டும்... ஒருவழியாகச் சுதாரித்து எழுந்திருக்கிறார் எடப்பாடி. வேட்பாளர் தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றனதான். ஆனால், அதெல்லாம் தேர்தல் நெருங்க நெருங்கச் சரியாகிவிடும். அதற்கு, திருச்சியில் கூடிய கூட்டமே சாட்சி” என்றனர்.
“தேர்தல் களத்தை, தங்களுக்கும் தி.மு.க-வுக்குமான ‘நேருக்கு நேர்’ யுத்தகளமாக மாற்றத் திட்டமிடுகிறார் எடப்பாடி. அது சரியான வியூகம்தான். ஆனால், மத்தியில் ஆள்பவர்களை எதிர்த்து அவர் திடமாக எதுவுமே விமர்சிப்பதில்லை. எப்படியும் ரெய்டு அஸ்திரங்கள் வரத்தான் போகின்றன. அதற்காக அடக்கி வாசிப்பது, மெளனம் சாதிப்பது, அவருக்கு மட்டுமல்ல... அவரோடு கூட்டணி அமைத்தவர் களுக்கும் தேர்தலில் பின்னடைவைத்தான் தரும். ஏனெனில், மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு யார் வரவேண்டும் என்று தீர்மானிக்கிற தேர்தல் இது. அந்த விஷயத்தில் உடைத்துப் பேச எடப்பாடி இன்னும் முன்வரவில்லை. ‘அவர் இப்போது சுதாரித்துவிட்டார்’ என்று அவருடைய கட்சியினர் சொன்னாலும், இன்னும் அவர் முழுதாகச் சுதாரிக்கவில்லை என்பதே உண்மை” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!
- மனோஜ் முத்தரசு
படம்: ரமேஷ் கந்தசாமி
from India News https://ift.tt/SxYNVQw
0 Comments