தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து, மாநாட்டில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று, தொழிற்துறையில் தமிழ்நாட்டின் சாதனைகள் குறித்து உரையாற்றிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ``இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. பல்வேறு துறைகளில் முதலிடத்திலும் இருக்கிறது. தமிழ்நாடு 45,000 தொழிற்சாலைகளுடன் உற்பத்தி மையமாகத் திகழ்கிறது.
ஆட்டோ மொபைல், மின்சார வாகனம், டயர் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. நாட்டில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் 70 சதவிகிதம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 30 சதவிகிதம். தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டின் முதலிடத்தில் இருக்கிறோம். இந்தியாவில் வேலைக்குச் செல்லும் மொத்த பெண்களில் தமிழ்நாட்டில் மட்டும் 43 சதவிகிதம்.
கல்வி மற்றும் மருத்துவத்தில் நாட்டில் முன்னணியில் இருக்கிறோம். தமிழ்நாடு, ஒவ்வொரு 250 பேருக்கும் ஒரு மருத்துவரைக் கொண்டிருக்கிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இன்ஜினீயர்களை உருவாக்குகிறோம். இந்தியாவின் டாப் 100 கல்லூரிகளில் 22 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டின் திறமைமிக்க இளைஞர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை தரக்கூடியதாக இருக்கும். குறிப்பாகப் பெண்களுக்கு" என்று கூறினார். 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த மாநாடு இன்றும், நாளையும் என இரண்டு நாள்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/avzPpXd
0 Comments