`இந்தியா கூட்டணியில் விரிசல் இல்லை... காங்கிரஸ்தான் நம்பர் ஒன் கட்சி!' – என்ன சொல்கிறார் நாராயணசாமி?

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின், இரண்டாம் கட்ட பாத யாத்திரையை சகித்துக்கொள்ள முடியாமல் பா.ஜ.க குந்தகம் விளைவித்து வருகிறது. குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, திட்டமிட்டு ராகுல் காந்தியின் பாத யாத்திரையை நிறுத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்தார். ஆனால் அது பலிக்கவில்லை. அஸ்ஸாமில் மிக எழுச்சியாக பாத யாத்திரை முடிந்து இப்போது மேற்கு வங்கத்துக்கு வந்திருக்கிறது. ராகுல் காந்தியின் அமைதியான பாத யாத்திரையை குலைக்கின்ற பா.ஜ.க-வின் இந்த ஜனநாயக விரோத செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆர்.என்.ரவி

தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு தொடர்ந்து இடையூறு அளித்து, பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இப்போது புதிய சர்ச்சையை ஆரம்பித்திருக்கிறார். மகாத்மா காந்தியால் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் போராட்டமும், இந்திய ராணுவத்தின் கிளர்ச்சியும்தான் சுதந்திரம் பெற்றதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார். இந்திய சரித்திரத்தை மறைத்து, திரித்து, நாட்டு மக்கள் மத்தியில் ஒரு தவறான தகவலை பேசியிருக்கிறார். காந்தியின் சுதந்திர போராட்டத்தை உலகமே பாராட்டுகிறது. ஆர்.என்.ரவி உண்மையிலேயே சுயநினைவோடு இருக்கிறாரா... அல்லது அவர் இந்திய சரித்திரத்தை படிக்கவில்லையா என்று தெரியவில்லை.

காந்தியின் அறப்போராட்டத்தின் மூலமே நாம் சுதந்திரத்தை பெற்றோம். அதை கொச்சைப்படுத்துகின்ற வகையில் ஆர்.என்.ரவி பேசியிருக்கும் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என்று, அரசு அதிகாரிகளை பயன்படுத்தி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் நடத்தும் அந்த விழாக்களில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என யாரும் இல்லை. இது ஏதோ போட்டி அரசாங்கம் நடப்பதுபோல் தெரிகிறது. ஒருபுறம் முதல்வர் ரங்கசாமி ஆட்சி, மற்றொருபுறம் ஆளுநர் தமிழிசை ஆட்சிபோல் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் ஆளுநர் இந்த நிகழ்ச்சிகள் மூலம் பா.ஜ.க-வுக்கு விளம்பரம் தேடி வாக்கு சேகரிக்கிறார். புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள், `மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செய்து முடித்துவிட்ட நிறைவு எனக்கு இருக்கிறது' என்று கூறுகிறார்.

நாராயணசாமி - தமிழிசை

இதன் மூலம் ரங்கசாமி அப்பட்டமான பொய்யை மக்கள் மத்தியில் கூறுவது தெளிவாக தெரிகிறது. `புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவோம், மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் கோடி பெறுவோம், மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க நடவடிக்கை எடுப்போம்,  மாநில அரசு வாங்கிய ரூ.8 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்வோம், அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் கொடுப்போம், 10,000 பேருக்கு அரசு வேலை கொடுப்போம்’ என பல வாக்குறுதிகளை கொடுத்தார் முதல்வர் ரங்கசாமி. ஆனால் அதில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வாங்கியதில் இமாலய ஊழல் நடந்துள்ளது.

லேப்டாப் வாங்குவதற்கு ஒதுக்கிய ரூ.63 கோடியில், ரூ.27 கோடியை லஞ்சமாக பெற்றிருக்கின்றனர். எனவே அது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வைக்க வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவரை நாங்கள் வற்புறுத்துவோம். கொரோனா காலத்தில்கூட புதுச்சேரி மாநில பொருளாதாரத்தை சிறப்பாக நாங்கள் கையாண்டோம். ஆனால் மத்தியில் பா.ஜ.க ஆட்சியும், மாநிலத்தில் கூட்டாட்சியும் இருக்கிறது. ஆனால் ஏன் மக்களுக்கான திட்டங்களை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை... முதியோர், கணவரை இழந்தோர் உள்ளிட்டோரின் உதவித்தொகை 3, 4 மாதங்களுக்கு பிறகு வழங்கப்படுகிறது. இதுதான் ரங்கசாமியின் சிறப்பான ஆட்சியா?

புதுச்சேரிக்கு என்ன வளர்ச்சி கொண்டு வந்தார் என்பதை முதல்வர் மேடை போட்டு பேச தயாரா... நான் தயார். புதுச்சேரியை பொறுத்தவரையில் காங்கிரஸ்தான் நம்பர் ஒன் கட்சி. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. புதுவை மாநில இந்தியா கூட்டணியில் விரிசல் இல்லை. ஆனால், கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் பா.ஜ.க கூட்டணியில் விரிசல் உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் எந்தவித விரிசலும் கிடையாது. எங்கள் கட்சியின் தலைமை எங்களுக்கு என்ன சொல்கிறதோ அதனை நாங்கள் செய்வோம். தி.மு.க தலைமை சொல்வதை அவர்கள் செய்வார்கள்” என்றார்.



from India News https://ift.tt/6uOGUPh

Post a Comment

0 Comments