லட்சத்தீவு - மாலத்தீவு விவகாரம்: `அப்போது நீங்கள் எல்லோரும் எங்கே போனீர்கள்?'

இந்தியாவின் ஒரு பகுதியான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி, அந்த அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுசெய்தார். அதில் பல புகைப்படங்களையும் அவர் பகிர்ந்தார்.

மோடியின் லட்சத்தீவு பயணம்

இந்த நிலையில், சுற்றுலாவைப் பெரிதும் நம்பியிருக்கும் அண்டை நாடான மாலத்தீவின் அமைச்சர்கள், பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் எக்ஸ் தளப் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டனர். அதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட்ட மூன்று அமைச்சர்களை மாலத்தீவு அரசு, தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்கியது.

இந்த சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில், மாலத்தீவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அங்கு சுற்றுலா செல்ல விமானப் பயணம், ஹோட்டல் அறைகளை முன்பதிவுசெய்திருந்த ஏராளமான இந்தியர்கள், அவற்றை திடீரென ரத்துசெய்தனர் என்ற தகவல்கள் வெளியானது. இந்த விவகாரத்தால், இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்தது.

மோடி - மாலத்தீவு

இதற்கிடையில், இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கும் லட்சத்தீவு, சுற்றுலாவுக்கு மிகச் சிறந்த இடம் என்று குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் வெளியிட்டனர்.

மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

இதேபோல, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லட்சத்தீவு மிகப்பெரிய பிரச்னையை எதிர்கொண்டது. அந்த நிலத்தின் மக்களும் மிகுந்த நெடுக்கடிக்குள்ளாகினர். ஆனால், `அந்த நெருக்கடியின்போது அந்த மக்களுக்காகவும், அந்த தீவு பூமிக்காகவும் குரல் கொடுக்க முன்வராத திரைப் பிரபலங்கள், இப்போது மட்டும் லட்சத்தீவுக்காகப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது' என்ற ஆதங்கக் குரல்கள் சமூக வலைதளங்களில் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

லட்சத்தீவு!

2021-ம் ஆண்டு, லட்சத்தீவுக்கு எதிராகவும், அங்கு வசிக்கும் மக்களுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய சட்டங்களைக் கொண்டுவந்தார் லட்சத்தீவின் நிர்வாகிய மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருந்த பிரபுல் கோடா படேல். அப்போது, அவருக்கு எதிராக லட்சத்தீவு மக்கள் பெரும் போராட்டங்களில் இறங்கினர். அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி முதல் ஸ்டாலின்வரை குரல் கொடுத்தனர்.

மாட்டிறைச்சிதான் இந்த மக்களின் பிரதான உணவு. மீன்பிடித்தல், மீன் பதப்படுத்துதல், மீன் ஏற்றுமதி ஆகியவை லட்சத்தீவு மக்களின் முக்கியத் தொழில். அங்கு தென்னைமரங்கள் அதிகமாக இருப்பதால் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வணிகமும் பெரியளவில் மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலா மூலம் வருவாய் கிடைக்கிறது. 

LDAR (Lakshadweep Development Authority Regulations) எனப்படும் லட்சத்தீவு மேம்பாடு ஆணைய விதிமுறைகளை பிரபுல் கோடா படேல் புதிதாகக் கொண்டுவந்தார். அதன்படி, லட்சத்தீவில் வசிக்கும் யாரை வேண்டுமானாலும் எந்தக் காரணமும் இல்லாமல் நிலத்திலிருந்து வெளியேற்றவோ, மாற்று இடத்தில் வசிக்கவோ உத்தரவிட முடியும். தற்போது, லட்சத்தீவில் வெளியாட்கள் யாரும் நிலங்களை வாங்க முடியாது. ஆனால், வெளிநபர்கள் அங்கு நிலங்களை வாங்குவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.

பிரபுல் கோடா பிரபு

லட்சத்தீவு கால்நடைப் பாதுகாப்பு விதிமுறைகள் (Lakshsadweep Animal Preservation Regulations) புதிதாகக் கொண்டுவரப்பட்டன. லட்சத்தீவு மக்களின் முக்கிய உணவாக மாட்டிறைச்சி இருந்துவரும் நிலையில், மாட்டிறைச்சியை நேரடியாகவோ மறைமுகமாகவோ வைத்திருப்பதற்கும் கொண்டுசெல்வதற்கும் எதிராக அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அது, லட்சத்தீவு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அந்தச் சட்டத்தை மீறினால் மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். ரூ.5 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படும். லட்சத்தீவு பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் மதிய உணவில் மாட்டிறைச்சி உணவு வழங்கப்பட்டுவந்த நிலையில், அந்தச் சட்டத்தால் அது கடும் பாதிப்பை ஏற்படுத்தும் லட்சத்தீவு மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

லட்சத்தீவு மீன்பிடித்தொழில்

லட்சத்தீவு மக்களுக்கு எதிராக இத்தனை அராஜகங்கள் மேற்கொள்ளப்பட்டபோது, இன்றைக்கு மாலத்தீவு விவகாரத்தை வைத்து லட்சத்தீவைத் தூக்கிப்பிடிக்கும் நபர்கள் யாரும் வாயைத் திறக்கவில்லை. அப்போது எந்த கருத்தையும் தெரிவிக்காதவர்கள் இப்போது மட்டும் குரல் கொடுப்பது ஏன் என ஆதங்கத்தை வெளிபடுத்த தொடங்கியுள்ளார்கள் லட்சத்தீவு மக்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/djIbmkp

Post a Comment

0 Comments