தேனி: அதிமுக அலுவலகத்தில் அமமுக கூட்டம் - குழப்பத்தில் கட்சியினர்! - நடந்தது என்ன?

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆர்.எம்.டி.சி காலனி அருகே அ.தி.மு.க கட்சியின் மாவட்ட அலுவலகம் உள்ளது. இரண்டு தளங்களுடன் 700 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட இந்த அலுவலகத்தை, 2016-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 

தேனி அதிமுக அலுவலகம்

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தபோது, தேனி அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க என இரு தரப்பினரும் கூட்டம் நடத்த உரிமை கோரியதால், பிரச்னை எழுந்தது. இதனால் அலுவலகத்திற்கு உரிமை கோரி நீதிமன்றத்தை நாடுமாறு கூறிய போலீஸார், கட்சியினர் யாரும் அலுவலகத்தை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எந்த ஒரு கூட்டமும் நடத்தப்படாமல் இருந்தது.

தேனியில் அ.தி.மு.க கட்சி அலுவலகம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அங்கு பணிபுரியும் வாட்ச்மேனுக்கு ஊதியம், அலுவலக மின் கட்டணம், வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு தினசரி மாலை அணிவிப்பது என அனைத்து செலவுகளையும் ஓ.பி.எஸ் வழங்கி வந்தார். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கான அனைத்து செலவுகளையும் அ.ம.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த தங்கத்தமிழ்செல்வன் கவனித்தார்.

அதிமுக கட்சி அலுவலகத்தில் அமமுக-வினர்

கடந்த ஆண்டு ஓ.பி.எஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்றபோது அ.தி.மு.க-வினர் மோதிக் கொண்டனர். இதையடுத்து கட்சி அலுவலகத்திற்கு அ.தி.மு.க-வினர், ஓ.பி.எஸ் அணியினர் என யாரும் செல்லவில்லை. இந்த நிலையில், அ.ம.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நேற்று அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அ.ம.மு.க தெற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

சசிகலாவிற்கும் அ.ம.மு.க கட்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாத நிலையில், தேனி அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் அ.ம.மு.க-வினர் எப்படி கூட்டம் நடத்தலாம் என எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமமுக கூட்டம்

இது குறித்து அ.தி.மு.க தேனி மாவட்டச் செயலாளர் ஜக்கையனிடம் விசாரித்தோம். ``சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்தைப்போல பிற மாவட்டங்களில் உள்ள கட்சி அலுவலகங்கள் அனைத்தும் அ.தி.மு.க-வுக்குச் சொந்தமானது. அ.தி.மு.க எடப்பாடி, ஓ.பி.எஸ் அணிகளாக பிரிந்த நேரத்தில் தேனி அ.தி.மு.க கட்சி அலுவலகத்தை ஓ.பி.எஸ் சொந்தம் கொண்டாடினார்.

ஜக்கையன்

அப்போது பிரச்னை எழுந்ததை தொடர்ந்து, யாரும் கட்சி அலுவலகம் செல்லவில்லை. இந்த நிலையில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத அ.ம.மு.க-வினர் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளிக்க உள்ளோம்" என்றார்.

தேனி மாவட்ட அ.ம.மு.க-வினரிடம் பேசினோம். ``ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் அ.தி.மு.க கட்சி அலுவலகம் திறக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் அறக்கட்டளையின்கீழ் கட்சி அலுவலகங்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த அறக்கட்டளை நிர்வாகத்தில் சசிகலா முக்கிய பொறுப்பில் இருந்தாலும், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன்தான் அதனை நிர்வகித்து வந்தார்.

அதிமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்திய அமமுக-வினர்

சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி என யாருக்கும் தன்னுடைய ஆதரவை தெரிவிக்காமல் பூங்குன்றன் இருந்து வந்த நிலையில் சசிகலா, அறக்கட்டளை நிர்வாகிகளை மாற்றி தன் வசப்படுத்திக் கொண்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அ.ம.மு.க சார்பில்தான் அலுவலகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம்கூட இதே அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடத்தினோம்" என்றனர்.



from India News https://ift.tt/5jOw1z0

Post a Comment

0 Comments