`கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகள் முதல்முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன. இதுவரையில் டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலேயே நடத்தப்பட்டு வந்த இந்தப் போட்டிகள் தற்போது முதல்முறையாக தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளின் தொடக்க விழா நேற்று முந்தினம் (ஜனவரி 19) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
`தமிழகம் சாம்பியன்ஸ்களை உருவாக்கிய பூமி' - பிரதமர் மோடி
கேலோ விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை தொடக்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, ``நாடு முழுவதிலுமிருந்து சென்னைக்கு வந்திருக்கும் அனைத்து விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்களுக்கும் எனது வாழ்த்துகள். `ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற சத்திய உணர்வை நீங்கள் ஒன்றாக வெளிப்படுத்துகிறீர்கள். தமிழ்நாட்டின் அன்பான மக்கள், அழகான தமிழ் மொழி, அதன் கலாசாரம் மற்றும் உணவு வகைகள் விளையாட்டு வீரர்களான நீங்கள் உங்களின் சொந்த இல்லத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். தமிழ்நாட்டின் விருந்தோம்பல் அனைத்து இதயங்களையும் வெல்லும். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் வீரர்களின் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும். இங்கு கிடைக்கும் புதிய நட்புகளும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாம்பியன்ஸ்களை உருவாக்கும் பூமி தமிழகம். டென்னிஸ் சாம்பியன் அமிர்தராஜ் பிரதர்ஸ், ஒலிம்பிக்கில் இந்திய அணியை தங்கப் பதக்கம் வெல்ல வழிநடத்திய ஹாக்கி கேப்டன் பாஸ்கரன், செஸ் வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, பாரா ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் உள்ளிட்ட பலரும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள்தான். தற்போது, தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு பெரிய நகரங்கள் விளையாட்டு வீரர்களை வரவேற்க தயாராக இருக்கின்றன. பங்கேற்பாளராக இருந்தாலும் சரி, பார்வையாளராக இருந்தாலும் சரி, சென்னையின் கண்கவர் கடற்கரைகள் அனைவரையும் ஈர்க்கும். மதுரையின் பிரமாண்டமான கோயில்கள், திருச்சியின் கோயில்கள் மற்றும் அதன் கலை மற்றும் கைவினைப் பொருட்கள், உழைப்பு நிறைந்த கோயம்புத்தூர் நகரம் ஆகியவற்றின் சிறப்புகளும், தமிழ்நாட்டின் நகரங்களில் கிடைக்கும் அனுபவங்களும் மறக்க முடியாதவை.
தமிழ்நாட்டில் தோன்றிய தற்காப்புக் கலையான சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை காண ஆவலாக இருக்கிறேன். திருவள்ளுவர் தனது குறள்கள் மூலம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து அவர்களுக்கு வழிகாட்டினார். துன்பங்களின்போது துவண்டு விடாமல் வலுவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். வீரமங்கை வேலு நாச்சியார் இந்த விளையாட்டுப் போட்டியின் சின்னமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் பெண் சக்தியின் அடையாளம். உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் திறமைகளை வெளிப்படுத்துவது உட்பட, உள்ளூர் திறமைகளை சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் அனுபவம் அளிக்க வேண்டும். உலக விளையாட்டுச் சூழலின் முக்கிய மையமாக நாடு திகழ வேண்டும். எனவே, 2029-ல் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளையும், 2036-ல் ஒலிம்பிக் போட்டிகளையும் இந்தியாவில் நடத்த தீவிரமாக பணியாற்றி வருகிறோம். விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்காக நின்றுவிடாமல், மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் தளம். இது இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும். கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு தொடர்பான பொருளாதாரத்தின் பங்கை அதிகரிக்கவும், விளையாட்டு தொடர்பான துறைகளை மேம்படுத்தவும் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் விளையாட்டுத் துறை வளர்ச்சி ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய இந்தியாவால் மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முடியும். இந்த ஆண்டு புதிய சாதனைகளை இந்தியா படைக்கும்!" எனப் பேசினார்.
`மணிப்பூர் வீரர்களை சகோதரத்துடன் தமிழ்நாட்டுக்கு வரவேற்று, பயிற்சி கொடுத்தோம்! - முதலமைச்சர் ஸ்டாலின்
அதேபோல, கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், `` எல்லாருக்கும் எல்லாம், அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்ட நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துக்கொண்டு வருகிறோம். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது, எப்படி நம்முடைய இலக்கோ, அதேபோல், தமிழ்நாட்டை இந்தியாவினுடைய விளையாட்டுத் தலைநகரமாக நிலைநிறுத்துவதும் நம் குறிக்கோள். இந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் அமைச்சர் உதயநிதியை நான் பாராட்டுகிறேன்.
தி.மு.க அரசு பொறுப்பேற்றப்பிறகு, சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஏடிபி சேலஞ்சர் டூர், சென்னை ஒபன் சேலஞ்சர், ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி-2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை -2023, அலைச்சறுக்குப் போட்டி, கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை, தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். அதேநேரத்தில் விளையாட்டுக் கட்டமைப்புகளையும் உலக தரத்துக்கு உயர்த்திக்கொண்டு வருகிறோம். மணிப்பூரில் நிலவும் பிரச்னைகளால், அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் போனது. எனவே அவர்களை சகோதர உணர்வோடு தமிழ்நாட்டுக்கு வரவேற்று, பயிற்சி கொடுத்த நமது திராவிட மாடல் அரசு அவர்களில் சிலரை, இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்திருக்கிறது.
மேலும், கேலோ இந்தியா போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவது, எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இந்தமுறை சேர்க்கப்பட்டிருக்கிறது. கேலோ இந்தியா-2023 லோகோவில், வான்புகழ் வள்ளுவர் இடம்பெற்றிருக்கிறார். அந்த சிலை மறைந்த முதல்வர் கருணாநிதியால், அய்யன் திருவள்ளுவருக்கு இந்தியநாட்டின் தென்முனையில் வானுயர அமைக்கப்பட்டது. அதேபோல், ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய வீரமங்கை வேலுநாச்சியாரின் சின்னமும், அதில் இடம்பெற்றிருப்பது நமக்கு கூடுதல் பெருமை!" எனத் தெரிவித்தார்.
கால் தடுமாறிய முதல்வர்; கரம்பிடித்த பிரதமர்:
முன்னதாக, விழா தொடக்கத்தின்போது பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் சேர்ந்து நடந்தபடி விழா அரங்கத்தினுள் நுழைந்தார்கள். அப்போது, முதல்வர் ஸ்டாலின் சற்று கால் இடறி தடுமாற, உடனடியாக உடன்வந்த பிரதமர் மோடி அவரின் கைகளை இறுக்கிப்பிடித்து தாங்கிக்கொண்டார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின்போது சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசிக்கொண்டனர். அப்போது, வெள்ள நிவாரண நிதி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/ru7Ul32
0 Comments