ஆளுங்கட்சியின் பிரதிநிதியாக அவைக்குள் நுழைந்தாலும், சபாநாயகர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒருவர் கட்சி சார்பற்றவராகவே கருதப்படுகிறார். முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் அவரை அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைக்கிறார்கள். அவைக்குள் இருக்கும் எல்லாக் கட்சி உறுப்பினர்களையும் அவர் சரிசமமாக நடத்த வேண்டும். ஆனால், பலர் அப்படி இருப்பதில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நர்வேகர்.
மகாராஷ்டிர முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் இரண்டாக உடைந்தது. அவர் கட்சியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே தனி அணியாகச் சென்று பா.ஜ.க ஆதரவுடன் முதல்வரானார். அப்போதுமுதல் ‘யார் உண்மையான சிவசேனா’ என்ற சர்ச்சை தொடர்கிறது. இரு தரப்பினரும், ‘எதிர்தரப்பினரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். ‘இந்த விஷயத்தில் சபாநாயகர் ஒரு முடிவு எடுக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. அத்துடன் சில கருத்துகளையும் தெரிவித்தது.
‘ஷிண்டே தரப்பினர் சொன்ன ஒருவரை சிவசேனா கொறடாவாக சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் நியமித்தது தவறு. எம்.எல்.ஏ-க்கள் பலத்தை வைத்து மட்டுமே ஒரு கட்சியின் பலத்தை மதிப்பிடக்கூடாது’ என்றெல்லாம் உச்ச நீதிமன்றம் கூறியதை சபாநாயகர் ராகுல் நர்வேகர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
‘உத்தவ் தாக்கரே அணியிலோ, ஏக்நாத் ஷிண்டே அணியிலோ யாரையும் பதவிநீக்கம் செய்யப்போவதில்லை. 38 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா. உத்தவ் தாக்கரே அணியின் 16 எம்.எல்.ஏ-க்களும் எதிர்க்கட்சி வரிசையில் உட்காரக்கூடாது. அவர்கள் ஷிண்டே அணியினருடன் சேர்ந்து ஆளும்கட்சி வரிசையில்தான் உட்கார வேண்டும். ஷிண்டே தரப்பினரின் கொறடா உத்தரவை அவர்கள் மதிக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்திருக்கிறார் சபாநாயகர்.
நடுநிலை பிறழ்ந்து சபாநாயகர்கள் செயல்படுவது புதிதல்ல. பா.ஜ.க-வில் இணைந்து மேற்கு வங்காள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் சுவேந்து அதிகாரி. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் எம்.பி-யான அவர் தந்தை சிசிர் அதிகாரி, கடந்த 2021-ம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் சேர்ந்தார். கட்சி தாவல் தடை சட்டப்படி அவரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் பலமுறை நாடாளுமன்ற சபாநாயகரிடம் மனுக்கொடுத்துக் களைத்துவிட்டது.
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க சார்பில் எம்.எல்.ஏ-வாக வென்ற முகுல் ராய், சில வாரங்களில் திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். பா.ஜ.க முறையிட்டும் அவர் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை. அங்கு சபாநாயகர், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்.
நம் தமிழகத்தில், ‘அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும்’ என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முறையிடுகிறார். அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தவே தடை விதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற அ.தி.மு.க துணைத் தலைவராக எடப்பாடி பக்கத்தில்தான் கெத்தாக இன்னமும் உட்கார்கிறார்.
சபாநாயகரின் உயர்ந்த அந்தஸ்துக்குக் குறியீடாக அவையில் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் இருக்கைகளைவிட உயர்ந்த பீடத்தில் சபாநாயகரின் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் அமர்பவர்களும் அந்த உயரத்துக்கு நியாயம் செய்ய வேண்டும்.
from India News https://ift.tt/xwFACzI
0 Comments