காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,000 கி.மீட்டருக்கு மேலாக நடைப்பயணமாக மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை, இமாச்சலப் பிரதேசம், கர்நாடக, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற உதவியது. அதைத் தொடர்ந்து தற்போது லோக் சபா தேர்தலுக்கு முன்னதாக, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான 6,713 கி.மீ தொலைவிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மல்லிகார்ஜுன முன்னிலையில் ராகுல் காந்தி நேற்று தொடங்கினார்.
பேருந்து மூலமாக மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரையில், 15 மாநிலங்கள், 100 மக்களவைத் தொகுதிகள், 337 சட்டமன்றத் தொகுதிகள், 110 மாவட்டங்கள் என மொத்தமாக 67 நாள்களில் 6,713 கி.மீ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் ராகுல் காந்தி.
இந்த யாத்திரையின் தொடக்கக் கூட்டம், மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தில் மாநில அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றது. இதில், மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தியுடன் சேர்ந்து கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ``பிரதமர் மோடி மணிப்பூருக்கு வாக்கு கேட்க வருகிறார். ஆனால், மணிப்பூர் மக்கள் பிரச்னையில் இருக்கும்போது தன்னுடைய முகத்தைக்கூட அவர் காட்டுவதில்லை. மக்களைத் தூண்டுவதற்காக அனைத்திலும் இவர்கள் (பா.ஜ.க) மதத்தைக் கலக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, ``2004 முதல் நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால், முதன்முறையாக இந்தியாவில் ஆட்சியின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் சீர்குலைந்த இடத்துக்குச் வந்திருக்கிறேன். ஜூன் 29-க்குப் பிறகு, மணிப்பூர் மணிப்பூராகவே இல்லை. அது பிளவுபட்டு, எல்லா இடங்களிலும் வெறுப்பு பரவியிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் இழப்பைச் சந்தித்தனர். மக்கள் கண்ணெதிரே தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர்.
ஆனால், இந்தியப் பிரதமர் இதுவரை உங்கள் கண்ணீரைத் துடைக்கவோ, கையைப் பிடித்து ஆறுதல் கூறவோ இங்கு வரவில்லை. இது மிகவும் வெட்கக்கேடான விஷயம். ஒருவேளை பிரதமர் மோடி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமலிருக்கலாம். பா.ஜ.க-வை பொறுத்தவரை, மணிப்பூர் அவர்களின் அரசியல் மற்றும் சித்தாந்தத்தின் சின்னம். மேலும், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் வெறுப்பின் சின்னம். நீங்கள் மதித்த அனைத்தையும் இழந்துவிட்டீர்கள். ஆனால், நீங்கள் மதித்த அனைத்தையும் மீண்டும் ஒருமுறை கண்டுபிடித்து உங்களிடம் கொண்டு வருவோம்.
மணிப்பூர் மக்களாகிய நீங்கள் அனுபவித்த வலி, வேதனை, இழப்பு, சோகம் ஆகியவற்றை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே நீங்கள் மதித்ததை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளிக்கிறோம். நல்லிணக்கம், அமைதி, பாசம் ஆகியவற்றை மீண்டும் கொண்டு வருவோம்" என்று கூறினார்.
from India News https://ift.tt/FXYpywS
0 Comments