காசிமுத்து மாணிக்கம், வர்த்தக அணிச் செயலாளர், தி.மு.க
“அர்த்தமில்லாமல் பேசியிருக்கிறார் ஆளுநர் தமிழிசை. அவர் சொல்வது உண்மையென்றால், ‘தமிழ்நாடு வளர்ந்துவிட்டது’ என்று சொல்லி, எல்லா நிதியையும் பின்தங்கிய வடமாநிலங்களுக்குக் கொடுக்கிறீர்களே... ‘தமிழ்நாடு திண்டாடும் மாநிலம். எனவே, கூடுதல் நிதி கொடுங்கள்’ என்று அவர்களுடைய நிதியமைச்சர் நிர்மலாவிடம் சீற வேண்டியதுதானே... முடியாது. ஏனென்றால், ‘திராவிடம்’ என்ற சொல்லைக் கேட்டாலே பதற்றமாகும் ஒன்றிய பா.ஜ.க அரசின் புள்ளிவிவரங்களே, தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு தொழில்துறை தொடங்கி மனிதவள மேம்பாடு வரையில் முன்னேறியிருப்பதாகச் சொல்கிறது. வரலாறு காணாத பேரிடர் வந்தபோதிலும், ‘திராவிட மாடல்’ அரசுதான் தமிழ்நாட்டை மீட்டெடுத்தது. ஒன்றிய அரசு ஒரு பைசாகூட நிதி தராமல் கைவிட்டதுடன், ‘இதைப் பேரிடராக அறிவிக்க முடியாது’ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது. திராவிடம் குறித்து இவ்வளவு பேசும் மாண்புமிகு ஆளுநரே திராவிட மாடல் அரசால்தான் மருத்துவரானார் என்பதை மறுக்க முடியுமா... முதலில் ஆளுநர் தமிழிசை அவர்கள் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர்போலப் பேசாமல், தன் பதவிக்கான மாண்புடன் பேச வேண்டும். அவருக்கு அரசியல் பேசுவதுதான் விருப்பம் என்றால் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு பா.ஜ.க உறுப்பினராக வந்து பேசட்டும்.”
ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க
“ஆளுநர் சொன்னது முழு உண்மை. இல்லாத ஒன்றைக்கொண்டு போலியான பிம்பத்தைக் கட்டமைத்து ஆட்சி நடத்துகிறார்கள். ஒரேயொரு பேரிடரில் தி.மு.க-வின் நாடகங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வாரியிறைத்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, இதுவரை சொன்னபடி எதையாவது செய்திருக்கிறார்களா... நகைக்கடன் தள்ளுபடி தொடங்கி மகளிர் உரிமைத்தொகை வரை அனைத்திலும் இடியாப்பச் சிக்கல்தான். அதோடு, அரசு ஊழியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மருத்துவர்கள்-செவிலியர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என அன்றாடம் போராட்டங்களால் இந்த அரசு திக்கித் திணறி, திண்டாடிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கஞ்சா, மது, கள்ளச்சாராய போதைப் புழக்கங்களால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்... இன்னொரு பக்கம் ஊழல், கனிம வளக் கொள்ளை, சாதி வன்கொடுமைப் பிரச்னைகளால் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், திராவிட மாடல் அரசில் நல்லது எதுவும் நடக்கவில்லை. திராவிட மாடல் என்பது வளர்ச்சி மாடல் அல்ல, அது ஊழல் மாடல் என்பதை அடுத்தடுத்து சிறைக்குச் செல்லும் அதன் அமைச்சர்களே நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.”
from India News https://ift.tt/MavApbV
0 Comments