``தமிழ்நாட்டுக்கு 10 லட்சம் கோடி..." உதயநிதி Vs அண்ணாமலை சர்ச்சை... பி.டி.ஆர் சொல்லும் கணக்கு...

தமிழகம் தன் பங்குக்கு அதிக வரி வருமானத்தை மத்திய அரசுக்குத் தந்தாலும், மத்திய அரசாங்கம் தமிழகத்திற்குத் தரவேண்டிய நிதியைப் போதுமான அளவில் தருவதில்லை என அமைச்சர் உதயநிதி சொல்லப் போக, கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 10 லட்சம் கோடிக்கு மேல் தந்திருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்ல, இந்தப் பிரச்னையானது பலரும் பேசும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இது பற்றி தமிழக முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி முகாமில் பேசும்போது விளக்கமாக எடுத்துச் சொன்னார். அவருடைய பேட்டி, அப்போதே முழுமையான கட்டுரையாக வெளியிடப்பட்டது. அதிலிருந்து, நிதி பங்கீடு குறித்த கேள்வி மற்றும் பதில் இங்கே இடம் பிடிக்கிறது…

உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு செலுத்தும் ஜி.எஸ்.டி-யில் திரும்பக் கிடைக்கும் நிதி குறைந்துகொண்டே இருக்கிறது. இது வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலையா அல்லது இதுதான் சமத்துவமா?

‘‘உலகம் முழுவதும் கூட்டாட்சி அடிப் படையில் உள்ள எந்த ஒரு வகையிலான சட்ட அமைப்பிலும் நீங்கள் பார்த்தீர்களேயானால் வளர்ந்த பகுதியிலிருந்து கூடுதல் வரி எடுக்கப்பட்டு, வளர்ச்சி இல்லாத பகுதிகளுக்கு வழங்கப்படும். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பணக்கார நாடுகளிலிருந்து கூடுதல் வரி எடுக்கப்பட்டு, கிரீஸ், போர்ச்சுகல், இத்தாலி போன்ற நாடுகளுக்கு கூடுதலாக நிதி தரப்படும். அதேபோல்தான் இந்தியாவிலும் சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் மாநிலங்களிலிருந்து கூடுதல் வரி பெறப்பட்டு பிற மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

ஆனால், இதில் எனக்கு இருக்கும் கவலை எல்லாம் ஒரு காலத்தில் ஒரு ரூபாய் கொடுத்தால் 70 பைசா திரும்பக் கிடைத்தது. இப்போது ஒரு ரூபாயில் 30 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது. இப்படியே போனால் 10 பைசாதான் திரும்பக் கிடைக்குமோ என்று கவலையாக உள்ளது.

பீகாருக்கு ஒரு ரூபாய்க்கு 4 ரூபாயும், உ.பி-க்கு 1.80 ரூபாயும், அருணாசலம், மிசோரம் மற்றும் மேகாலயா போன்றவற்றுக்கு 8, 10 ரூபாயும் தரப்படுகிறது. பின்தங்கியவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தங்களுடைய வளர்ச்சியைத் துரிதப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறான நிதிப் பகிர்வு செய்யப்படுகிறது. இதன்மூலம் பொருளாதார ஏற்றத்தாழ்வை சரிசெய்ய முடியும். சமத்துவத்தை உருவாக்க முடியும் என்பதுதான் நோக்கம்.

ஆனால், இதுவரையிலும் 25 வருடங்களாக உள்ள இந்த நடைமுறையில் மாற்றங்கள் வந்திருக்கிறதா என்றால் இல்லை. கூடுதலாக வரி எடுக்கப்பட்ட பகுதிகளில் மேலும் கூடுதலாக எடுக்கப்படுகிறது. கூடுதலாக வரி தரப்பட்ட பகுதிகளில் இன்னும் அதிகமாக தரப் படுகிறது. ஆனால், அவர்கள் முன்னேறியதாகத் தெரியவில்லை. இன்னும் கீழே மோசமாகத்தான் போய்க்கொண்டிருக் கிறார்கள்.

இந்தப் போக்குதான் மிகுந்த கவலையை உருவாக்குகிறது. இதில் உள்ள சிக்கலைத் திருத்துவது ஒன்றிய அரசின் கடமை. 15-வது ஒன்றிய நிதிக்குழு வந்தபோது நான் இதுகுறித்து ஓர் அறிக்கையைக் கொடுத்தேன். அதில், ‘ஏன் நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் அந்த மாநிலங்களில் வளர்ச்சியே இல்லை. இதைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்’ என்றேன். அதேபோல, ‘நிதி ஒதுக்கீட்டுக்கான கணக்கீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு என்று தீர்மானிக்கிறீர்கள், அது சரியாக இருப்ப தில்லை. ஒவ்வோர் ஆண்டுக்கும் தனித்தனியாக ஒதுக்கீடுகளைத் திருத்த வேண்டும். அவர்களுக்கு எந்த நோக்கத்துக்குப் பணம் தரப்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றினால்தான் அடுத்தகட்ட நிதி கொடுக்கப்படும் என்று சொல்ல வேண்டும்’ என்றேன்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

அதிகமாக வரிப் பயன்பெறும் மாநிலங்களில் இதுவரைக்கும் 18 வயது நிரம்பிய பெண்களில் 30% பேர்தான் 12-வது படித்து முடிக்கிறார்கள். ஆனால், நமது மாநிலத்தில் இது 87 சதவிகிதமாக இருக்கிறது. இதில் மாற்றம் நடக்கவில்லை எனில், எப்படி வளர்ச்சியைப் பார்க்க முடியும்? எவ்வளவு தான் பணம் போட்டாலும் அது கிணற்றில் போடுவது போலத்தான் ஆகும். ஏழையாக இருந்தால் பணம் கொடுக்கிறேன் என்று கொடுத்துக்கொண்டே இருந்தால் அவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். நீங்களும் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். இது மாற வேண்டும். நிதிப் பகிர்வு என்பது ஒரு கூட்டாட்சி முறையில் அவசியம்தான், அரசின் கடமைதான் என்றாலும், அதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. இந்த வரம்பை மீறி அதிகமாக எடுக்கும் போக்கு தொடர்ந்தால் அது நாட்டின் ஒருங்கிணைந்த இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் ஆபத்தாக மாற வாய்ப்பிருக்கிறது.’’



from India News https://ift.tt/cZt6Ms3

Post a Comment

0 Comments