ஒடிசாவில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்... நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசா கார்த்திகேய பாண்டியன்?!

ஒடிசாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த கார்த்திகேயன் பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். கடந்த அக்டோபர் 23-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விருப்ப ஓய்வு பெற்றார் பாண்டியன். அவர் விருப்ப ஓய்வு பெற மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்தது. உடனே அவர் ஒடிசா அரசு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் `5-டி இனிஷியேட்டிவ் அண்ட் நவீன ஒடிசா'வின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி கேபினட் அந்தஸ்து கொண்டது. அதோடு இந்தத் துறை, முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படக்கூடியது. ஏற்கெனவே பாண்டியன் தனது பதவிக்காலத்தில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பாண்டியன் எந்நேரமும் அரசியலில் நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நவீன் பட்நாயக் - வி.கே.பாண்டியன்

எதிர்பார்த்தபடி அவர் தன்னை பிஜு ஜனதா தளத்தில் தற்போது இணைத்துக்கொண்டார். ஏற்கெனவே பாண்டியன், ஒடிசா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிட்டிருக்கிறார். திடீரென பதவியை ராஜினாமா செய்திருப்பது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் அரசியலில் நுழையவேண்டும் என்ற நோக்கத்தில் பதவியிலிருந்து விலகியிருப்பதாக, அனைவரும் நினைத்தனர். அவர்கள் நினைத்ததுபோல் நடந்திருக்கிறது. நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக, `பாண்டியன், பல ஆண்டுகளாக ஒடிசா மக்களுக்காக கடினமாக உழைத்து, மக்களின் நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறார். கட்சியின் உறுப்பினராக அந்தப் பணியை இனி தொடர்ந்து செய்வார்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கட்சியில் இணைந்த பிறகு பாண்டியன் அளித்தப் பேட்டியில், ``ஜெகநாதரின் ஆசியோடும், முதல்வரின் வழிகாட்டுதலோடும், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், பணிவுடனும் மாநில மக்களுக்காக தன்னலமின்றி பாடுபடுவேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். கட்சியில் பாண்டியனுக்கு இன்னும் பதவி எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவருக்காகக் கட்சியில் `செயல் தலைவர்' என்ற புதிய பதவியை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பூரி எம்.பி பினாகி மிஸ்ரா அளித்தப் பேட்டியில், ``முதல்வரின் ஆசிர்வாதத்தோடு பாண்டியன் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.

நவீன் பட்நாயக் - வி.கே.பாண்டியன்

நிர்வாகத்தில் செய்ததுபோல், கட்சியிலும் வெற்றியைக் கொண்டு வருவார். பாண்டியன் கட்சியில் சேர்ந்ததில், அனைவருக்கும் மகிழ்ச்சி. அவரது நிர்வாக மற்றும் அரசியல் அனுபவம் கட்சிக்கு நிச்சயம் பயனளிக்கும்'' என்றார்.

2024-ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அந்தத் தேர்தலில் கட்சிக்கு முழுமையான வெற்றிக்கு பாண்டியன் இப்போதே தனது வேலைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக பாண்டியன் இருப்பார் என்று அனைவரும் கூற ஆரம்பித்திருக்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில், பாண்டியன் போட்டியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசா?!

தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன், 2000-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றதிலிருந்து, ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். 2002-ம் ஆண்டு சாதாரண மாவட்டத் துணை ஆட்சித் தலைவராகத் தனது பணியைத் தொடங்கிய பாண்டியன், படிப்படியாக உயர்ந்து 2011-ம் ஆண்டு முதல்வர் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 2007-ம் ஆண்டு நவீன் பட்நாயக்கின் சொந்த ஊரான கஞ்சம் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டபோதுதான், முதல்வருடன் பாண்டியனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக 12 ஆண்டுகள் பணியாற்றிய பாண்டியன், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார்.

நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை பாண்டியன் பெரிய அளவில் வெளியுலகத்துக்கு வராமல் இருந்தார். ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு நவீன் பட்நாயக்கின் முகமாகவும், குரலாகவும் பாண்டியன் செயல்பட ஆரம்பித்தார். அதை நவீன் பட்நாயக்கும் முழுமையாக ஆமோதித்தார். அரசு நிர்வாகம் மட்டுமல்லாது, கட்சியிலும் தனது ஆதிக்கத்தை பாண்டியன் செலுத்தி வந்தார்.

நவீன் பட்நாயக்

ஒடிசாவைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியைத் திருமணம் செய்திருக்கும் பாண்டியன், ஒடிசா அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். நவீன் பட்நாயக் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு வயதும் 77 ஆகிவிட்டது. சாதாரணமாக இப்போது யாராலும் அவரைப் பார்க்க முடிவதில்லை. அவரின் உடல்நிலையிலும் சோர்வு தெரிகிறது என்கிறார்கள். அவற்றை கவனத்தில்கொண்டு, பாண்டியன் களத்தில் இறக்கப்பட்டிருப்பதாக ஒடிசாவில் பேச்சு அடிபடுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/URpmg0h

Post a Comment

0 Comments