16 காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை - குட்கா விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுகிறதா காவல்துறை?!

'போதைப்பொருள் விற்பனையை குறைக்க நடவடிக்கை எடுத்த டிஜிபி முதல் கடைநிலைக் காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரையும் நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். உங்களுக்கு என்னுடைய சல்யூட்” என கடந்த ஆகஸ்டில் கலைவாணர் அரங்கத்தில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' நிகழ்ச்சியில் பெருமிதம் பொங்க பேசியிருந்தார், முதல்வர் ஸ்டாலின். இதற்கு நேர் எதிராக சென்னையில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்த 16 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியல் மற்றும் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டிருப்பது விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

கேளம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் கோகுல கண்ணன் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அயனாவரம் போலீஸார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 'கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல கண்ணன், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் B.tech படிப்பை முடித்திருக்கிறார். வண்ண மீன்கள் விற்பனைக் கடை நடத்தி கொண்டே, தனது நண்பர் ராஜேஷ் மூலமாக ஆந்திராவிலிருந்து உயர்ரக கஞ்சா வகைகளை கூரியர் மூலமாகவும், ஆடி கார் மூலமாகவும் வாங்கி வந்திருக்கிறார். பின்னர் செங்குன்றம் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து, கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்திருக்கிறார்கள். ஆடி கார் போன்ற விலை உயர்ந்த காரில் சென்றால் போலீஸாரிடம் சிக்க மாட்டோம் என திட்டம் வகுத்து செயல்பட்டு வந்திருக்கிறார்' என தெரியவந்திருக்கிறது.

இதற்கிடையில் மாநிலம் முழுவதும் கடந்த 15 நாட்களில் போதை பொருள் கடத்திய 248 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 783 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது. இவ்வாறு நடக்கும் சம்பவங்களுக்கு பின்னால் பெரும்பாலும் காவல்துறை அதிகாரிகளே இருக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள், விவரம் அறிந்தவர்கள். இது சென்னையில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்த 16 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியல் மற்றும் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பிறப்பித்த உத்தரவில் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இதில் கார்த்திக், ஜானி செல்லப்பா, தீபக் குமார், ராஜேஷ், விஜயகாந்த், ரத்னகுமார், பிரியதர்ஷினி, மாரியப்பன், தவமணி, ரவி, ரமேஷ் கண்ணன், சிவக்குமார், பூபதிராஜ், தேவராஜூ, ராஜேஷ், ஜானகிராமன் ஆகிய காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் உள்ளது.

போலீஸார் கைப்பற்றிய கஞ்சா

எனவே குட்கா விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுகிறதா காவல்துறை என்ற கேள்வியை அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம், "காவல்துறை தலைவர் கஞ்சா 2.O வேட்டையை நடத்தினார். இதன் மூலம் கஞ்சா இருக்கிறது என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார். அப்போது பலகோடி சொத்தை முடக்கி விட்டோம். பலரை கைது செய்துவிட்டோம் என்றார்கள். ஆனால் தற்போது கஞ்சா 4.O வேட்டையை நடத்துகிறார்கள். இதன் மூலம் இன்றைக்கும் கஞ்சாவை ஒழிக்க முடியவில்லை என்பதுதான் நிலைமை. தற்போது 783 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. தமிழகத்திற்கு பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்துதான் வருகிறது. சோதனை சாவடிகளில் முறையான காவலர்கள் இல்லை.

பாபு முருகவேல்

இருப்பவர்களும் தங்களது பணியை முறையாக செய்வதில்லை. அது காவல்துறைக்கு தெரியாமல் நடக்காது. ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் கையை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள். தற்போது நடவடிக்கை எடுப்பப்பட்டிருக்கும் 16 காவல் ஆய்வாளர்கள் எல்லைக்கு உட்பட்ட உளவுத்துறை, நுண்ணறிவிப்பு காவல் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு 4 பேரை செய்தாலே கஞ்சா விற்பனை கட்டுக்குள் வரும். ஆகவே இதுஒரு நிர்வாக திறமையற்ற அரசாக இருக்கிறது. வாயில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என சொல்கிறார்கள். சமீபத்தில் ஏராளமான என்கவுண்டர்கள் நடந்திருக்கிறது. இதன் மூலம் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய அளவில் சந்தி சிரிக்கிறது" என கொதித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/ls5Vy4e

Post a Comment

0 Comments