TNPSC தலைவர் பதவிக்கான விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை சில மாதங்களாக கிடப்பில் போட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தற்போது பரிந்துரையை நிராகரித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. தொடர்ச்சியாக மசோதாக்களை கிடப்பில் போடுவதும், நிராகரிப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பதால். ’ஆளுநர் ஆர்.என் ரவி எல்லை மீறி செயல்படுகிறாரா?’ என்ற விவாதம் கிளம்பியுள்ளது. இதுகுறித்து விசாரித்தோம்...
2023 ஜூலை மாதம், தமிழக அரசின் பணிகளுக்கான பணியாளர்களைத் தேர்வுசெய்யும்TNPSC தலைவராக முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபுவை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரைத்தது தமிழ்நாடு அரசு. ஆனால் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டார் ஆளுநர். அவர் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தாலும் ஆளுநர் ஆர்,என் ரவி பரிந்துரை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒருவழியாக தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் ``தமிழ்நாடு ஆளுநருக்கும் அரசுக்குமான பனிப்போர் முடிந்தபாடில்லை. அரசு அனுப்பும் ஒருசில மசோதாக்களை கிடப்பில் போடுவதையும் திருப்பி அனுப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அதோடு ஆட்சியில் இருக்கும் தி.மு.கவின் கொள்கைகளை விமர்சித்து பேசவும் தொடர்கதையாக்கியுள்ளார்.
`மசோதாவுக்கு ஒப்புதலும் வழங்காமல் கொள்கையை சார்ந்த விமர்சனங்களை முன்வைக்கிறாரே இவர் ஆளுநரா பா.ஜ.க தலைவரா?” என்ற விமர்சனத்தை முன்வைத்து வருகிறது தி.மு.க. தற்போது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக டிஎன்பிஸ்சி தலைவர் நியமன மசோதாவையும் நிராகரித்திருப்பது ஆளும் தரப்பை சூடாக்கியுள்ளது” என்றுள்ளனர்.
இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் சல்மாவிடம் பேசினோம் ``தமிழ்நாடு டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமித்தபோது தமிழ்நாடு அரசுக்கு பல தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தன. அவரது சிறப்பான பணியை வெளிப்படுத்தியதால் தற்போது TNPSC தலைவராகவும் நியமிக்க முன்வந்தது தமிழ்நாடு அரசு.
இந்த ஆளுநரோ தமிழ்நாடு அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாதென்ற முன்முடிவில் இருக்கிறார். உயிர்பறித்த ஆன்லைன் ரம்மி மசோதாவையே நிராகரித்தவர், மீண்டும் மசோதா நிறைவேற்றி நீண்ட நாட்களுக்கு பின் வழியில்லாமல் நிறவேற்றினார். இப்படி 10க்கும் மேற்பட்ட மசோதா மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு தொந்தரவு கொடுக்கத்தான் பா.ஜ.க இவரை தமிழ்நாட்டுக்கு அனுப்பியுள்ளதென்பது தெளிவாகத் தெரிகிறது. பா.ஜ.கவுக்கு விஸ்வாசமாக இருந்திட வேண்டும் என்ற நோக்கில் தனது அதிகார எல்லையை மீறியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஆன்.என் ரவி. தமிழ்நாட்டு மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்திக் கொண்டே அவர்களுக்கு துரோகம் செய்யும் விதமாக செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது” என்றார் கொதிப்புடன்.
இதுகுறித்து மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் கார்த்தியாயினி ``தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ள அவர் ஒன்றும் திமுகக்காரர் அல்ல, ஒரு மாநிலத்தின் ஆளுநர். ஒரு கோப்பை ஆராய்ந்து அதன்மீது முடிவெடுக்கக் கூடிய எல்லா அதிகாரமும் அவருக்கு இருக்கிறது.
சைலேந்திரபாபுவை விட தகுதியான நபரை நியமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்கூட அவர் அப்படி செய்திருக்கலாம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசே கொதிப்பதுதான் வியப்பாக இருக்கிறது. ஏன் சைலேந்திரபாபுவை விட்டால் தமிழக அரசுக்கு வேறு அதிகாரிகளே இல்லையா. அவரால் மட்டும்தான் சிறப்பாக செயல்பட முடியும் எனக் கூறி மற்ற அதிகாரிகளை குறைத்து எடைப் போடுகிறதா தமிழ்நாடு அரசு. ஆளுநரின் செயல்பாடு அவரின் அதிகாரத்துக்கு உட்பட்டுதான் இருக்கிறது. ஆளுநரின் கருத்து சுதந்திரத்தில்தான் திமுக தலையிடுகிறது.” என்றார் காட்டமாக.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆளுநர் மாளிகை அதிகாரிகள் சிலரோ, ``டிஎன்பிஎஸ்சி தலைவரின் அதிகபட்ச வயது வரம்பே 62 தான். இப்போதே சைலேந்திரபாபு-வுக்கு 61 வயதாகிவிட்டது. சுமார் ஓராண்டு காலத்திலேயே டிஎன்பிஎஸ்சி தலைவரை மாற்ற வேண்டி வருமென்பதால் ஆளுநரை இதனை நிராகரித்திருக்கிறார்” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/3dMbfIi
0 Comments