திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த மாநகராட்சி 14-வது வார்டு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் தனபால், ``எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை, சாலை மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தேன். ஆனால், பல மாதங்களாகக் கண்டுகொள்ளவில்லை, பணிகளை வேண்டுமென்றே கிடப்பில் போட்டிருக்கின்றனர். என்னுடைய பகுதிகளிலுள்ள பிரச்னைகள் எப்போது தீர்க்கப்படும்?" எனக் கேள்வியெழுப்பினார். மேலும், அவர் தன்னுடைய வார்டில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டும் வகையில், பாதாளச் சாக்கடை நீர் வழிந்து ஓடும் புகைப்படங்களை பிரின்ட் செய்த டி-ஷர்ட்டை அணிந்து கூட்டத்துக்கு வந்திருந்தார்.
இது குறித்து நம்மிடம் பேசிய அவர், ``திண்டுக்கல் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினராகி ஒன்றரை ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கின்றன. எங்களது வார்டான விவேகானந்தர் நகரில், பாதாளச் சாக்கடை நீர் கொப்பளித்து வீதியில் வழிந்து வருவது, பெரும் பிரச்னையாக இருக்கிறது. எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 5,000 மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
இந்தச் சுற்றில் திண்டுக்கல்லிலுள்ள 48 வார்டுகளிலும் பணி செய்ததில், எல்லா பணிகளும் கால் பங்கு மட்டுமே நிறைவு பெற்றிருக்கின்றன. அதேபோல இந்தப் பணிகளையெல்லாம் மேற்கொள்வதற்கு சென்னையிலுள்ள ஒரு நிறுவனம் மொத்தமாக கான்ட்ராக்ட் எடுத்து பேக்கேஜிங் முறையில் செய்கிறது. அவர்களும் சரிவர இதனை பராமரிப்பது இல்லை. பணிகளை முடிப்பதில் மிகவும் தாமதப்படுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாமன்றக் கூட்டத்தில் வெறும் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன. அதற்கான தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் மெத்தனப் போக்கோடு நடந்து கொள்கிறார்கள். மக்கள் பிரச்னைகளுக்கு மதிப்பளித்து, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்று என் வார்டுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பிரச்னைகளை மற்றவர்களுக்கு தெரிவிக்கும்விதமாகவும், மேயருக்கு அடையாளப்படுத்தும்விதமாகவும் டி-ஷர்ட் அணிந்து சென்றேன்" என்றார்.
இந்த நிலையில் பாஜக உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மாநகராட்சி மேயர் ஜோதி பிரகாஷ் வெளியிட்டிருக்கும் மறுப்பு அறிக்கையில், ``மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டில் ரூ.102 லட்சம் மதிப்பீட்டில் குமரன் திருநகர் விரிவாக்கத்தில் பேவர் கற்கள் பதித்தல், அண்ணாநகர்ப் பகுதியில் நகர் நல மையம் கட்டுதல், ரவுண்டு ரோடு முதல் அண்ணாநகர் வரை குழாய் அமைத்தல், பேவர் கற்கள் பதிக்கப்பட்ட சேதமடைந்த பகுதிகளைச் சீரமைத்தல், விவேகானந்தர் நகரில் குழாய் அமைத்தல், ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் தார் சாலை அமைத்தல், வ.உ.சி நகர்ப் பகுதியில் பேவர் கற்கள் பதித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நல்லமுறையில் பணிகள் முடிவுற்று, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மேலும், மேற்படி வார்டில் இதரப் பகுதிகளான சுப்ரீம் நகரில் தார் சாலை அமைக்கும் பணி, விவேகானந்தர் நகர் முதல் திருச்சி சாலை வரை ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
கடந்த 30 ஆண்டுகளாக மழைநீர் செல்ல வழியின்றி சாலையிலும், அருகிலுள்ள தனியார் இடத்திலும் சென்று கொண்டிருந்த மழைநீர் மற்றும் சாக்கடை நீர், பொதுமக்களின் பேராதரவுடன் அனைத்து தரப்பு மக்களும் போற்றும் விதமாக, அருகிலுள்ள ரயில்வே பாலம் வழியாகக் கடத்தப்பட்டு, அருகிலுள்ள நீர்நிலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. கழிவுநீர் உந்து நிலையம் அமைத்து, நிரந்தரமாகக் கழிவுநீர் மற்றும் மழைநீர் அதிக அளவில் செல்லும் காலங்களில் ரூ.14.2 லட்சம் செலவில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் விவேகானந்தர் நகரில் வடிகால் அமைக்கும் பணி, திருச்சி சாலை, விவேகானந்தர் நகர், ஆர்த்தி தியேட்டர் ரோடு மற்றும் இதர பகுதிகளிலுள்ள பாதாளச் சாக்கடை திறவு தொட்டிகளைப் பழுது நீக்கம் செய்யும் பணி ஆகிய பணிகள் சுமார் ரூ.28 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
மாமன்ற உறுப்பினருக்குரிய விவரங்கள் அவையில் தெரிவிக்கப்பட்டிருப்பினும், மேற்கண்ட விவரங்களை ஏற்காமல், தனக்கு சுய விளம்பரம் தேடும் வகையில் நடந்து கொண்டு, மாமன்றத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/nBrqK2J
0 Comments