Israel - Hamas War: ``இரண்டாம் கட்ட போரை தொடங்கிவிட்டோம்; எதிரிகளை மண்ணுக்கு..!" - நெதன் யாகு சபதம்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடக்கும் இந்த போரில் ஹமாஸ் குழுவால் 1,400 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அதேவேளையில், இஸ்ரேலிய படைகளால் பாலஸ்தீனத்தில் 3,195 சிறுவர்கள், 1,863 பெண்கள் உட்பட 7,700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

போர் குறித்து, கடந்த 56 ஆண்டுகளாகக் குடியேற்றங்களால் பாலஸ்தீனியர்களின் நிலம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதாகத் தெரிவித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், ``காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கவில்லை. ஹமாஸின் திடீர்த் தாக்குதல் பயங்கரமானதாகும். அதற்காகப் பாலஸ்தீன மக்களுக்குத் தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது. இஸ்ரேலின் தொடர்க் குண்டு வீச்சு சர்வதேச மனித உரிமைச் சட்ட மீறல்" என்று கூறியிருந்தார்.

இருப்பினும், ஹமாஸை முற்றிலுமாக அழிக்காமல் விடமாட்டோம் என காஸாவில் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேலிய படைகள் இரண்டாம் கட்ட போரை தொடங்கிவிட்டதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நெதன்யாகு, ``காஸா போரின் இரண்டாம் கட்டத்தை இஸ்ரேலிய படைகள் கட்டவிழ்த்துவிட்டன. அவை தரைவழி தாக்குதலால் ஹமாஸ் குழுவினருக்கு எதிராகத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றன. இந்த போர் நீண்டதாகவும் இன்னும் கடினமானதாகவும் இருக்கும். அதேபோல், ஹமாஸின் ஆட்சி மற்றும் ராணுவ திறன்களை அழிப்பது, பணயக்கைதிகளை மீட்டுக் கொண்டுவருவது என இலக்குகளும் தெளிவாக இருக்கின்றன. இப்போது நாங்கள் தொடக்கத்தில் மட்டுமே இருக்கிறோம். நிச்சயம், எதிரிகளை மண்ணுக்கு மேலும், கீழும் அழிப்போம்" என்று கூறினார்.



from India News https://ift.tt/zpXqygf

Post a Comment

0 Comments