புல்வாமா, மணிப்பூர் வன்முறை, அதானி... ராகுல் காந்தி - சத்ய பால் மாலிக் உரையாடலின் ஹைலைட்ஸ்!

கடந்த 2019-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கும் சில மாதங்களுக்கு முன்னர், ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியபோது அங்கு ஆளுநராக இருந்தவர் சத்ய பால் மாலிக்.

மோடி - சத்ய பால் மாலிக்

சத்ய பால் மாலிக், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ``2019 மக்களவைத் தேர்தல் நம் ராணுவ வீரர்களின் உடல்கள்மீது நடத்தப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம். இதில், மௌனமாக இருக்குமாறு மோடி என்னிடம் கூறினார்'' என்று வெளிப்படையாகப் பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

அன்று முதல் பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து வெளிப்படுத்திவந்தார் சத்ய பால் மாலிக். அதோடு, ``ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது நான்தான் ஆளுநராக இருந்தேன். எனவே என்னுடைய உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு பா.ஜ.க-தான் பொறுப்பு" என்றும் சத்ய பால் மாலிக் கூறிவந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் தன்னை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம், புல்வாமா தாக்குதல், ஜம்மு காஷ்மீர் நிலைமை, அதானி மற்றும் தன்னுடைய ஆரம்பகால அரசியல் பற்றி சத்ய பால் மாலிக் உரையாடியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி தனது யூ டியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார். இந்த சந்திப்பில் ராகுல் காந்தியிடம் புல்வாமா தாக்குதல் குறித்து பேசிய சத்ய பால் மாலிக், ``சி.ஆர்.பி.எஃப் வாகனத்தைத் தாக்கிய வெடிபொருள் நிரப்பப்பட்ட டிரக் சுமார் 10 - 12 நாள்களாக அந்தப் பகுதியில் சுற்றி வந்தது. அதிலிருந்த வெடிபொருட்கள் பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்டவை.

ராகுல் காந்தி - சத்ய பால் மாலிக்

அந்த வாகனத்தின் டிரைவர், உரிமையாளர் மீது பயங்கரவாத பதிவுகள் இருந்தன. அவர்கள் பலமுறை கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவை உளவுத்துறையின் ரேடாரில் இல்லை. சம்பவத்துக்குப் பிறகு, இது எங்களின் தவறு என்று இரண்டு சேனல்களிடம் சொன்னேன். அதேசமயம், இதை எங்கும் சொல்ல வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டேன். காரணம், எனது அறிக்கைகள் விசாரணையைப் பாதிக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், விசாரணையே நடைபெறவில்லை. அது தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், மூன்றாம் நாள் பிரதமர் மோடி தனது உரையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டார்" என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ``இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்துக்குச் சென்றேன். அப்போது ஒரு அறைக்குள் நான் அடைக்கப்பட்டேன். அங்கு பிரதமர் மோடி இருந்தார். அந்த அறையை விட்டு வெளியேறவே நான் போராட வேண்டியிருந்தது. அது மிகவும் அருவருப்பாக இருந்தது" என்றார்.

ராகுல் காந்தி

அடுத்து, அதானி குறித்து பேசிய சத்ய பால் மாலிக், ``அதானி பெரிய பெரிய குடோன்களை கட்டினார், தானியங்கள் உட்பட பயிர்களை விலைக்கு வாங்கினார் என்பதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அரசு காப்பாற்றத் தவறிவிட்டது. அடுத்த ஆண்டு அவற்றின் விலை அதிகரிக்கும். அப்போது அதானி அவற்றை விற்பனை செய்வார்.

சத்ய பால் மாலிக்

இதுவே குறைந்தபட்ச ஆதரவு விலை அமல்படுத்தப்பட்டால், ஒரு விவசாயி தனது பொருட்களை மலிவான விலையில் அவர்களுக்கு விற்க மாட்டார்கள். இன்னொருபக்கம், அரசாங்க பணம் அனைத்தும் அதானியிடம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்" என்றார்.

மேலும் மணிப்பூர் விவகாரம் பற்றி பேசிய சத்ய பால் மாலிக், ``மணிப்பூரின் நிலைமைக்கு அரசின் தோல்வியே காரணம். இன்றுவரை முதலமைச்சர் ஒன்றுமே செய்யவில்லை. அவர் நீக்கப்படவுமில்லை. மணிப்பூரை அவர்கள் (பா.ஜ.க) தொந்தரவு செய்துவிட்டார்கள். ஆனால், இவையெல்லாம் இன்னும் ஆறு மாதங்களுக்குத் தான். என்னால் எழுதிக் கொடுக்கவே முடியும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள்" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/Lbj01q4

Post a Comment

0 Comments