`` `கட்டிவைத்து உதைத்து விரட்டுவேன்' என மிரட்டுகிறார்” - திமுக முன்னாள் எம்.எல்.ஏ-மீது பிடிஓ புகார்

தஞ்சாவூர் அருகே முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ, தன்னை பணி செய்யவிடாமல் மிரட்டுவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தன்னை வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர், கூடுதல் கலெக்டரிடம் மனு அளித்திருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிடிஓ அறிவானந்தம் உடன் மகேஷ் கிருஷ்ணசாமி

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணம் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் அறிவானந்தம். இவர் சமீபத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்திடம், புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில், `திருவோணம் தி.மு.க வடக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான மகேஷ் கிருஷ்ணசாமி என்னை பணி செய்யவிடாமலும், தனக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகளை வழங்க வேண்டும் என மிரட்டுகிறார்.

சிவவிடுதி ஊராட்சியில் 2022-23-ம் ஆண்டு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட, அனுமதி வழங்கபட்டு ஊராட்சிச் செயலாளருக்கு வேலை உத்தரவை வழங்கினேன். இந்தப் பணியை சிவவிடுதி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் சிரோன்மணி ஒப்பந்தம் எடுத்து பணிகளைச் செய்ய முயன்றார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, `திருவோணம் முன்னாள் எம்.எல்.ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, எனக்கு இந்த வேலையை செய்ய ஒப்படைத்திருக்கிறார். நான்தான் பணியினை செய்வேன்' எனக் கூறி தடுத்திருக்கிறார்.

திருவோணம் யூனியன்

இதற்கு முருகேசன் சிரோன்மணி தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததுடன், என்னிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து கடந்த 11-ம் தேதி, என்னை செல்போனில் தொடர்புகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, `நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் வேலையை கலியமூர்த்திதான் செய்வார், என்னை கேட்காமல் நீ எந்த ஒப்பந்த வேலைக்கான உத்தரவு யாருக்கும் வழங்கக் கூடாது' என மிரட்டினார்.

மேலும், `மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அனுமதிக்கப்படும் எந்த வேலையையும், பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவிக்கக் கூடாது. என்னிடம்தான் தெரிவிக்க வேண்டும். இதற்கு இஷ்டம் இருந்தால்தான் இங்கு வேலை பார்க்க முடியும். இல்லை என்றால் திருவோணம் வட்டாரத்தைவிட்டு ஓடிவிடுடா' என்றும், `ஆட்டுக் கொட்டகை, மாட்டுக்கொட்டகை அமைக்கும் பயனாளிகள் பட்டியல் நான்தான் தருவேன். அதை மட்டும்தான் நீ கூடுதல் கலெக்டருக்கு அனுப்ப வேண்டும்.

முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ மகேஷ் கிருஷ்ணசாமி

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒப்பந்த வேலைகளை நான் சொல்லும் நபருக்குத்தான் கொடுக்க வேண்டும் எனக் கூறியதுடன், என்னைப் பற்றி உனக்கு தெரியுமா, உன்னைக் கட்டிவைத்து உதைத்து விரட்டி விடுவேன்' என தாறுமாறான, தரக்குறைவான வார்த்தைகளில் பேசி மிரட்டினார்.

திருவோணம் யூனியனில் வளர்ச்சிப் பணிகள் காலதாமதமாக நடப்பதற்கு முன்னாள் எம்.எல்.ஏ மகேஷ் கிருஷ்ணசாமிதான் காரணம். இவர் தொடர்ந்து மிரட்டல் விடும் நிலையில், திருவோணம் யூனியனில் பணிபுரிவதற்கு எனக்கு அச்சமாக உள்ளது. எந்த நேரத்திலும் அவரின் ஆதரவாளர்களை வைத்து என்மீது தாக்குதல் நடத்துவார் என்ற நிலையில், எனக்கு உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே வேறு யூனியனுக்கு என்னை பணியிட மாறுதல் செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-மீது அரசு அதிகாரி ஒருவர் புகார் கொடுத்திருப்பது தஞ்சாவூர் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து அறிவானந்தத்திடம் பேசினோம், ``முன்னாள் எம்.எல்.ஏ என்னை போனில் மிரட்டினார். நடந்த சம்பவத்தை நான் எனது மனுவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். கூடுதல் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்" என்றார். இது குறித்து மகேஷ் கிருஷ்ணசாமி தரப்பில் கேட்டபோது, ``சேர்மன் இருக்கிறார் அவரை கலந்தாலோசித்து, எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். மிரட்டல் விடுக்கவில்லை" என்றார்.



from India News https://ift.tt/hQS8or1

Post a Comment

0 Comments