ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்தில் மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா மற்றும் மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கே தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு 8.30 மணிக்குதான் தொடங்கியது. கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் மற்றும் மத்திய இணை அமைச்சர் ஆகியோரை வரவேற்று பேசிய நவாஸ்கனி எம்.பி. ஒன்றிய அமைச்சர்கள் என வரவேற்றதால், மத்திய அமைச்சர் என கூறுமாறு அங்கிருந்த பா.ஜ.கவினர் கூச்சலிட்டனர்.
அதற்கு, முடியாது என கையால் செய்கை காட்டியதால் ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர், `உனது பேச்சை நிறுத்து, மேடையை விட்டு கீழே இறங்குயா’ என ஒருமையில் திட்ட தொடங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா நவாஸ்கனியிடம் இருந்து மைக்கை வாங்கி பேசத் தொடங்கினார். பா.ஜ.கவினரின் இந்த எதிர்ப்பை கொஞ்சமும் எதிர்பாராத நவாஸ்கனி மேடையில் பேசிய மத்திய அமைச்சரிடம், `யூனியன் மினிஸ்டர் என்பதை தான், தமிழில் ஒன்றிய அமைச்சர் என கூறினேன். நான் பேசியதில் எந்த தவறும் இல்லை’ என்பது போன்று விளக்கத்தை கூறினார். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் சுருக்கமாக பேசி முடித்து புறப்பட்டார்.
ஆனால், நவாஸ் கனி, ஒன்றிய அமைச்சர் என குறிப்பிட்டு பேசிய பேச்சுக்கு அங்கிருந்த பா.ஜ.கவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து நவாஸ்கனி ஒழிக என கோஷமிட்டபடியே இருந்தனர். இதனால், அங்கு அசாதாரண சூழல் உருவானது. நிலைமையை உணர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது காரில் வருமாறு எம்.பி நவாஸ்கனியை அழைத்து சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் நடைபெற வேண்டிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நவாஸ் கனியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவசர அவசரமாக பாதியிலேயே முடிக்கப்பட்டது. இதன் காரணமாக தங்களுடைய கோரிக்கைகளை தெரிவிக்க நீண்ட நேரம் காத்திருந்த. மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
from India News https://ift.tt/KTS6ZEv
0 Comments