``மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு மூலம் செயல்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளன!” - ஆளுநர்‌ ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். மதியம் 1.30 மணிக்கு ராஜபாளையம் தனியார் மண்டபத்தில் விஸ்வகர்மா அசோசியேசன் நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், "விஸ்வகர்மா தொழிலாளர்கள் இல்லாமல் நாட்டில் தொழிற்சாலைகளும் விவசாயமும் வளர முடியாது. பிரதமர் மோடி, விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தைரியமாக செயல்படுத்தி உள்ளார். இந்தத் திட்டத்தை இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதனால் அவர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மரியாதை

பிரதமர் மோடி, இதுவரை கவனிக்கப்படாத துறைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார். விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம், 18 வகையான கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தொழில்நுட்ப உதவி, பொருள் உதவி, சிறுகுறு கடனுதவி செய்வதுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கு சிலர் அனைத்தையும் அரசியலாகவே பார்க்கின்றனர். மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். குலக்கல்வி திட்டத்தை, தந்தை செய்யும் தொழிலையே மகனும் செய்ய வேண்டும் என்று தவறாக பொய் பரப்புரை செய்து வருகின்றனர். அவ்வாறு பேசுபவர்கள், யாரையும் ஒன்றுபடவிடுவதில்லை.

பட்டியலின மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நாளிதழில் வந்த செய்தியின்படி, இந்துமதி என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண், பஞ்சாயத்து தலைவராக பதவியேற்பதில் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கான சமூகநீதி மறுக்கப்படுகிறது. ஆனால், இவர்கள்தான் சமூக நீதியை காப்பாற்றுகிறார்கள் என தங்களைப் பற்றி பரப்புரை செய்துக்கொள்கின்றனர். பின்தங்கிய வகுப்பினரை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே நாட்டை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

பேச்சு

மின்சாரம் குடிநீர் சமையல் எரிவாயு போன்ற அனைத்து திட்டங்களும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் ஒருமாநிலத்தில் அதிகமான வசதிகளோ அல்லது மற்றொரு மாநிலத்தை இருட்டடிப்பு செய்யவோ முடியாது. இந்தியாவை தனது குடும்பமாக பிரதமர் நினைக்கிறார். குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனை என்று வந்தால் அவருக்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்து அதை சரி செய்கிறோமோ அதேபோல் நடந்து கொள்ள வேண்டும். பிரச்னையை அரசியல் நோக்கோடு சந்தித்தல் கூடாது.

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்கிறது. பல்வேறு மாநிலங்களில் அது செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளது. கணக்கு தணிக்கை குழு வழங்கிய அறிக்கையில் வீடு இல்லாதவர்களுக்கான திட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 40% நிதி பயன்படுத்தப்படவில்லை. இந்த 40 சதவிகித நிதி வேறுத் திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தினர்

திட்டங்கள் பிரதமர் அறிவித்தாலும், அவை அனைத்தும் மக்களுக்கானது. மத்திய அரசு நேரடியாக நிறைவேற்றப்படும் ரயில்வே திட்டத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தைக் கொண்டு தமிழகத்தில் உள்ள ரயில்வே நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் 75 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தும் திட்டம் உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு மூலம் செயல்படுத்தும் போது பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகிறது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் மக்களுக்கு இன்னும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த அறியாமை இருப்பது தெரியவந்துள்ளது. தாங்கள் நினைத்த தொழிலை தொடங்குவதற்கு தேவையான பொருளுதவி தொழில்நுட்ப உதவி பெறுவதற்கான விழிப்புணர்வு இன்னும் மக்களுக்கு ஏற்படவில்லை" என பேசினார்.

தொடர்ந்து சிவகாசியில் தொழிலதிபர்களுடன்‌ நடைபெற்ற சந்திப்பில், "சிறுவயதில், சிவகாசி எங்கிருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட இன்றைய தினம் சிவகாசியை அடையாளப்படுத்தும் அளவுக்கு உங்களால் இந்த ஊர் உயர்ந்திருக்கிறது. திறமையுள்ள சிவகாசி ஊர் மக்கள், நாட்டின் உயர்வுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் நிறைய பணியாற்றுகின்றனர்.

கவர்னர் ரவி

நமது நாட்டின் மக்கள் தொகை 140 கோடி. ஆனால் அத்தனை பேருக்கும் சேர்த்து ஒரு கோடி அரசு ஊழியர்கள் கூட இல்லாத நிலை தான் உள்ளது. நமது திறன் அடையாளப்படுத்தபடவில்லை என்றால் நாடு வளர்ச்சியடையாது. நாடு வளர்ச்சியடைய வேண்டுமெனில் அனைவருக்கும் சமமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள் மூலம் இன்று உலகளாவிய பிரச்னைகளுக்கு கூட தலைமைதாங்க கூடிய அளவுக்கு நாடு வளர்ந்திருக்கிறது.

ஆய்வு

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக நமது நாடு இருக்கிறதென்றால் அது அரசாங்கத்தால் அல்ல உங்களைப் போன்றவர்களால் தான். 2014-ல் 500 க்கும் குறைவான சிறுகுறு தொழில் நிறுவனங்களே ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் தற்போது பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நமது நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. அவை, அனைத்துக்கும் தொழில்நுட்ப அறிவியல் ரீதியாக நாம் முன்னேறி இருப்பதுதான்‌ காரணம். இதன் விளைவாக இன்று ஸ்டார்ட் அப் துறையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறையில் உலகின் முதல் 3 நாடுகளில் நாம் இருக்கிறோம். பசுமைசூழல் அமைப்பிலும், டிஜிட்டல்மயமாக்கலிலும் உலகின் முன்னணியில் நாம்‌இருக்கிறோம். தமிழகத்தின் கிராமப்புறங்களில் அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடு இந்தியா தான். உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செயற்கைக்கோள் உருவாக்கி அதை வெற்றிகரமாக விண்ணிலும் செலுத்தியிருக்கிறோம்.

மத்திய அரசு மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையேயான அரசியல் காரணங்களை தாண்டித்தான் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியும். நாடு முழுவதும் அரசியலாலும், சட்டத்தாலும் தான் சூழப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்கோ, தனிப்பட்ட விருப்புக்கோ இங்கு யாரும்‌செயல்பட முடியாது.

காமராஜர் இல்லம்

பிரதமர் மோடி நமது நாட்டின் மீதான பார்வையை மாற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார். டெல்லியில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டிற்கு பிறகு உலக தலைவர்கள் அனைவரும் இந்தியாவின் 83 தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு நடக்க சம்மதித்துள்ளனர். இதுதான் புதிய வலிமையான பாரதத்திற்கான‌ அடையாளம். ஜி-20 மாநாட்டிற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பெரிய விஞ்ஞானிகளையோ அறிவாளிகளையோ சென்று சந்திக்கவில்லை. அந்த கட்டிடம் கட்ட உறுதுணையாக இருந்த 3200 பாமர மக்களை சந்தித்து அவருடன் பேசி அமர்ந்து உணவருந்தினார். இது பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மீது நம்பிக்கையை காட்டுகிறது.

இங்கு பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து கேட்டேன். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு தற்போது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடையினை நீக்குவதற்கு மத்திய அரசு அதன் பணியை நிச்சயமாக செய்யும். பட்டாசு தொழிலானது 100 கோடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கக்கூடிய வேலை. அப்படிப்பட்ட வேலைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை நான் உளமாற உணர்கிறேன். எனவே, எல்லா தடைகளை களைவதற்கும் தொழிலாளர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கும் அரசுடன் சேர்ந்து என்னால முயற்சிகளை கட்டாயம் நான் செய்வேன்" என பேசினார்.

பார்வையிடுதல்

தொடர்ந்து சாத்தூரில் தீப்பெட்டி தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய அவர், சாலை மார்க்கமாக விருதுநகரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் இல்லத்திற்கு வருகை தந்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/HJBV7iz

Post a Comment

0 Comments