பொள்ளாச்சி சித்திக், செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், தி.மு.க
``கொத்தடிமையாகவே இருந்து பழகிப்போனவர் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி. அவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லவில்லையென்றால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். வங்கித்துறைகள் தொடங்கி ரஃபேல் வரை பல முறைகேடுகளைச் செய்திருந்தாலும், ‘ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று ஊர் ஊராகப் புளுகிக்கொண்டிருந்தது பா.ஜ.க. ஆனால், மருத்துவக் காப்பீடு தொடங்கி, சாலை அமைப்பது வரை ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதைப் போட்டு உடைத்துவிட்டது சி.ஏ.ஜி அறிக்கை. இந்த சி.ஏ.ஜி அறிக்கையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் ஒரே ஆதார் எண்ணைப் பயன்படுத்தி முறைகேடு செய்ததும் தெரியவந்திருக்கிறது. ஆனால், ‘ஊழலோ, முறைகேடோ நடந்ததாக அறிக்கையில் கூறப்படவில்லை’ என்று அண்ணாமலை பிதற்றுகிறார். தங்கள் தவறும் வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பழனிசாமியும் அதையே வழிமொழிந்துகொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க என்ன சட்டம் கொண்டுவந்தாலும் அமித் ஷாவுக்காக ஆதரவு தருகிறோம் என்று நாடாளுமன்றத்திலேயே பதிவுசெய்கிறார் தம்பிதுரை. இப்படி, அ.தி.மு.க., அமித் ஷா தி.மு.க-ஆகி நீண்டகாலம் ஆகிவிட்டது.’’
சிவசங்கரி, செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க
``உண்மைதானே... ஒரு வரவு செலவு கணக்கைவைத்து ஊழல் நடந்திருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்... இதேபோல, மத்திய அரசுக் கூட்டணியில் தி.மு.க இருந்த போது 2ஜி உட்பட பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டி ருக்கிறது. அப்போதெல்லாம் அது குறித்துப் பேச தைரியம் இருந்ததா இந்த விடியாத அரசுக்கு... முதலில், ஊழல் குறித்துப் பேச தி.மு.க-வுக்கு என்ன அருகதை இருக்கிறது... தங்கள் தவறுகளை மறைத்துக்கொள்ள தி.மு.க-வுக்கு எப்போதுமே ஒரு காரணம் தேவைப்படும். சென்ற மாதம் நீட் தேர்வு பிரச்னை, இந்த மாதம் சி.ஏ.ஜி அறிக்கை, அடுத்த மாதம் இன்னொரு பிரச்னை... எதுவும் இல்லையென்றால் ஒன்றிய அரசு, ஆளுநர் என்று எதையாவது சொல்லிக் கிளம்பிவிடுவார்கள். இவர்களுக்கு மாநில அரசு குறித்தோ, தமிழக மக்களின் நலன் குறித்தோ எந்த அக்கறையும் இல்லை. தங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் வழக்கை எப்படி வேகமாக முடித்துவைப்பது என்பதிலும், செந்தில் பாலாஜிக்கு எப்படி ஜாமீன் வாங்குவது என்பதிலும்தான் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். மாநிலத்தில் போலீஸுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இந்த விவகாரத்தையெல்லாம் மடை மாற்றுவதற்கு தி.மு.க-வினர் இப்படி எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள்.’’
from India News https://ift.tt/LaK1mx6
0 Comments