`ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?' மத்திய அரசின் திட்டமும் எதிர்கட்சிகளின் விமர்சனமும் - ஓர் அலசல்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ல் முடிவடைந்தது. இந்த நிலையில், இந்த செப்டம்பர் மாதம் 18 முதல் 22-ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருக்கிறார். இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" எனும் முறையை பா.ஜ.க அரசு அமல்படுத்த இருப்பதாக சில உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தேர்தல்

தற்போதுவரை, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர அரசுகள் கவிழும் பட்சத்திலும், கட்சி தாவல்களாலும், வேட்பாளர்கள் மறைந்தாலும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் மத்திய பா.ஜ.க அரசின் இந்த முழக்கம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வேகமாக ஒலித்துவருகிறது.

`ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் தேர்தல் செலவுகளை குறைக்க முடியும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக அடிக்கடி நிர்வாக அமைப்பின் பணிகள் தடைபடுகின்றன. இந்த இரண்டு தேர்தல்களை சேர்த்து நடத்துவதன் மூலம் நிர்வாக திறனை மேலும் அதிகரிக்க முடியும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் நடைபெறும் அந்த மாநிலத்தில் அமல்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. இதுவே ஒரே தேர்தலாக நடத்தினால் இதுபோன்ற இடையூறுகள் ஒருமுறை மட்டுமே ஏற்படும். மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையானது வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்’ என்று மத்திய பா.ஜ.க அரசு விளக்கமளித்திருக்கிறது.

மோடி

பா.ஜ.க-வின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இடதுசாரிகள், காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்கள், ``1951 முதல் 1967-ம் ஆண்டு வரை நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது என்றாலும், சில மாநிலங்களில் ஆட்சிக்காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மேலும், ஆறு முறை மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தொடர்ந்து ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பது, மக்கள் எண்ணத்துக்கு எதிரானது. இந்த திட்டத்துக்காக அரசைக் கலைத்தால் தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம். எனவே, இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும்.

எதிர்க்கட்சிகள்

மேலும் இது அதிபர் ஆட்சியை மறைமுகமாகக் கொண்டு வருவதுபோல் அமையும். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான காலச்சூழல் இருப்பதில்லை. மேலும், இயற்கைப் பேரழிவு, மழை வெள்ளம் போன்ற அசாதாரண சூழல் ஏற்பட்டால் அந்தப் பகுதி மக்களுக்கு வாக்களிப்பது பெரும் சவாலாக மாறும். மக்களின் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியா பல மாநிலங்களால் ஆன நாடு. எனவே மாநில பிரச்னைகளுக்கான முக்கியத்துவம் எப்போதும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மையுடையது.

சில மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்கள், பல மாநிலங்கள் புறக்கணித்துவிடும். எனவே மாநிலத்தின் தனித்தன்மையை தொடர்ந்து பாதுகாக்க அவர்களின் உரிமைக்கான போராட்டத்தையும் தொடர்ந்து நடத்த வேண்டியிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்னைகளுக்கான முக்கியத்துவம்தான் அதிகரிக்கும். மாநில அரசின் கோரிக்கைகள் கண்டுக்கொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தேசிய கட்சிகள் நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொள்ள பண பலத்தை வைத்திருக்கின்றன. ஆனால் மாநில கட்சிகளின் நிலை அப்படி இருப்பதில்லை.

தேர்தல்

எனவே தேர்தலை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படலாம். அதுமட்டும் இல்லாமல் ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால் சட்டமன்றத்தில் வெற்றிபெரும் அதே கட்சியை, 77 சதவிகித மக்கள் நாடாளுமன்றத்திற்கும் தேர்தெடுப்பார்கள். ஆனால் இதே 6 மாத இடைவெளியில் தேர்தல் நடத்தப்பட்டால் 61 சதவிகத மக்கள்தான் ஒரே கட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட IDFC நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது." என கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சட்ட விதிகளை உருவாக்குதல், அதை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இதற்கு முன்னர் 2018-ம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக விவாதித்து பரிந்துரைக்க இந்திய சட்ட ஆணையக்குழு ஏற்படுத்தப்பட்டது.

ராகுல் காந்தி - மோடி - தமிழ்

அந்தக் குழு மத்திய சட்ட அமைச்சகத்திடம் சமர்ப்பித்த வரைவு அறிக்கையில், "ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதன் மூலம், தேர்தல் செலவுகளை குறைத்து பணத்தை மிச்சப்படுத்த முடியும். மேலும், இந்த தேர்தல் முறையால் நிர்வாக அமைப்பு மற்றும் பாதுகாப்புப் படைகளின் சுமையைக் குறைக்க முடியும். ஒரே நேரத்தில் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் மூலம், அரசின் கொள்கைகளை சிறப்பாகச் செயல்படுத்துதல், நாட்டின் நிர்வாகம், தேர்தல் பிரசாரத்தை விட வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதல் போன்றவைகளை மேம்படுத்த உதவும்.

ஆனால் அரசியலமைப்பின் தற்போதைய கட்டமைப்பிற்குள் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற முறை பின்பற்றப்பட வேண்டுமானால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் தொடர்புடைய விதிகள் உள்ளிட்ட குறைந்தபட்சம் ஐந்து சட்டப் பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாகும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

பி.டி.டி ஆச்சாரி

இந்த விவகாரம் குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய நாடாளுமன்ற முன்னாள் பொதுச் செயலாளர் பி.டி.டி ஆச்சாரி, "ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாக வேண்டுமானால், நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் கலைப்பது, மாநில சட்டமன்றங்களைக் கலைப்பது, சட்டப்பிரிவு 356 மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் நேர்கோட்டில் கொண்டு வருவதே மிகப்பெரிய சவாலான விஷயம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இவை அனைத்தையும் கடந்து ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் சாத்தியமாகுமா என்பதை எதிர்வரும் அரசியல் நிகழ்வுகள் தான் மூலம் தான் தெரிய வரும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/J9kNFCE

Post a Comment

0 Comments