கேரளா ஓணம் பம்பர் லாட்டரி பரிசு, திருப்பூர் அதிர்ஷ்டசாலிக்குக் கிடைக்காதா... என்னவாகும் ரூ.25 கோடி?

தமிழ்நாட்டில் லாட்டரிக்குத் தடை இருந்தாலும், கேரளாவில் லாட்டரிக்குத் தடையில்லை. இந்நிலையில், கேரளாவில் புகழ்பெற்ற ஓணம் பம்பர் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தேர்வு கடந்த வாரம் வெளியானது. குலுக்கல் முறையில் TE 230662 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்தது.

ஓணம் லாட்டரி சீட்டு

இந்தத் தகவல் வெளியானவுடன் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்கிற கேள்விதான் எல்லோரிடமும் எழுந்தது. முதலில் கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த கோகுலம் நடராஜன் என்பவர் பெயருக்குதான் லாட்டரி விழுந்ததாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரைச் சேர்ந்த பாண்டியராஜன் உள்ளிட்ட நான்கு நண்பர்கள், நாங்கள்தான் டிக்கெட் வாங்கினோம் என்று கூறி ஆவணங்களை லாட்டரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ஆவணங்கள் சரியாக இருந்தாலும்,வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எதற்காக கேரளா வந்தனர் என்பதற்கான உண்மையான காரணத்தைச் சொன்னால் மட்டுமே பரிசுத் தொகை கொடுக்கப்படும்.

கேரள லாட்டரி

பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஒருவரை சந்திக்க கேரளா சென்றபோது டிக்கெட் வாங்கியதாகக் கூறியிருந்தனர்.

இதனிடையே, ``அவர்கள் சொல்வது பொய்யான தகவல். இவர்கள் கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கி தமிழ்நாட்டில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்திருக்கிறார்கள். அதில் ஒரு டிக்கெட்டுக்குதான் பரிசு விழுந்துள்ளது. கள்ளச் சந்தையில் விற்பனை செய்திருப்பதால் அவர்களுக்கு பரிசுத் தொகை கொடுக்கக் கூடாது.

பினராயி விஜயன்

அதை சமூக சேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்” எனத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அம்புரோஸ் என்பவர் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு புகார் அனுப்பியுள்ளார். இதன்மூலம் பாண்டியராஜன் மற்றும் அவரின் நண்பர்களுக்குப் பரிசுத் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தப் புகார் குறித்து ஐந்து நபர்கள் கொண்ட கமிட்டி மூலம் விசாரணை நடத்த கேரள லாட்டரித் துறை முடிவு செய்துள்ளது. ``கேரளாவில் லாட்டரி வாங்கத் தடை இல்லை என்றாலும், அதை  மற்ற மாநிலங்களுக்குச் சென்று விற்பதற்கு அனுமதியில்லை. ஆனால், இப்படி நடப்பது அதிகரித்துள்ளது.

லாட்டரி

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் கேரளாவுக்கு வந்துதான் லாட்டரி வாங்கினார்களா என்பது உள்ளிட்டவற்றை விசாரித்து உறுதி செய்துவிட்டுதான் பரிசுத் தொகை வழங்கப்படும்” என்று அந்த மாநில அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விவரமறிந்தவர்கள் கூறுகையில், ``கோழிக்கோடு பாவா லாட்டரி ஏஜென்சி மூலம், தமிழ்நாடு - கேரளா எல்லையான வாளையார் டேம் சாலையில் உள்ள லாட்டரி சீட்டுக் கடையில்தான் அந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த கோகுலம் நடராஜன் என்பவர் வாங்கிய டிக்கெட்டுக்குதான் பரிசு விழுந்ததாகத் தகவல் வெளியானது. நடராஜன் அங்கு அடிக்கடி லாட்டரி வாங்கும் ரெகுலர் கஸ்டமர். அதன்படி ரூ.5,000-க்கு 10 பம்பர் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

வாளையார்

மேலும், அவர் கோகுலம் என்கிற பெயரில் முன்பு லாட்டரி ஏஜென்சி நடத்தி வந்தவர் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, கேரளாவில் லாட்டரி வாங்கி தமிழ்நாட்டில் விற்பனை  செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டைக்கூட விற்பனை செய்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் ஒரிஜனல் டிக்கெட் யாரிடம் இருக்கிறதோ, அவர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தால் பம்பர் பரிசு அவருக்குச் செல்லும்.

குலுக்கல் முடிந்த 30 நாள்களுக்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள், கேரளா வந்ததற்கான காரணம் முறையாக இல்லாவிடின் பரிசுத் தொகை செல்லாது. அதே போல தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்குத் தடை உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை செய்திருந்தால் நம் மாநிலக் காவல் துறை மூலம் நடவடிக்கைக்கு உள்ளாகவும் வாய்ப்புள்ளது.

லாட்டரி

எனவே, லாட்டரி டிக்கெட்டைத் தமிழ்நாட்டில் விற்பனை செய்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது இரு மாநிலங்கள் மூலமாகவும் நடவடிக்கைக்கு உள்ளாக வாய்ப்புள்ளது” என்றனர்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு கேரளாவில் லாட்டரி விற்பது தொடர்பாக இன்னும் பல புதிய விதிமுறைகள் கொண்டுவரப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!



from India News https://ift.tt/zxaq1W5

Post a Comment

0 Comments