முக்கிய நிர்வாகிகள் வருகை, புனரமைப்பு பணிகள், ஆலோசனைக் கூட்டங்கள் எனப் பரபரப்பாகியிருக்கிறது ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யத்தின் கட்சி அலுவலகத்துக்கு விசிட் அடித்து, மய்யத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவென்பது குறித்து விசாரித்தோம்.
கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியோடு நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும், I.N.D.I.A கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்பதை இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. அதேசமயம் தேர்தலில் அவர் களமிறங்குகிறாரா என்ற கேள்விக்கு உறுதியான பதில்கள் ம.நீ.ம-விடம் இல்லை. இக்கேள்விகளுக்கெல்லாம் விரைவில் பதிலளிக்கப் போகிறார் கமல் என்கிறார்கள் மய்யத்தினர்.
முதலில் கமல்ஹாசன் இந்தியா திரும்புகிறார் என்ற தகவலோடு ம.நீ.ம-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பேச ஆரம்பித்தனர், தொடர்ந்து, ``படப்படிப்பு உள்பட தனிப்பட்ட காரணங்களுக்காகக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தியா திரும்பியதும் கட்சி தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் கமல் தலைமையில் ம.நீ.ம அலுவலகத்தில் நடக்கிறது. அதில் கூட்டணி குறித்த முடிவுகள் இறுதி செய்யப்படும். தலைமையின் விருப்பம் போலவே I.N.D.I.A கூட்டணியில் ம.நீ.ம அங்கம் வகிக்க வேண்டும் எனக் கட்சியினரும் விரும்புகிறார்கள். கூட்டணியை உறுதிப்படுத்திட ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை கமல்ஹாசன் சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது” என்றனர்.
கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது 100% உறுதியாகிவிட்டது எனப் பேச ஆரம்பித்த விவரமறிந்த கட்சியினர் சிலர், ``கமல் போட்டியிடுவதற்காகத்தான் மதுரை, கோவை மற்றும் தென்சென்னை மக்களவை தொகுதிகளில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். இந்த மூன்று தொகுதியிலும் நூறு சதவிகிதம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. அதில் ஏதேனும் ஒரு தொகுதியில் கமல்ஹாசன் களமிறங்க வாய்ப்புகள் அதிகம். I.N.D.I.A கூட்டணியோடு கைகோர்த்து தேசிய அளவில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 40 தொகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார், பயணத்துக்கான திட்டங்கள் எல்லாம் தயாராகி அப்ரூவலுக்காக வெயிட்டிங்” என்றார்.
நம்மிடம் பேசிய ம.நீ.ம-வின் ஊடகப் பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ் ``பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதென்பதில் மிக உறுதியாக இருக்கிறது மக்கள் நீதி மய்யம். மக்களவை தேர்தலில் நாங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கப் போகிறோமா அல்லது தனித்துப்போட்டியிடப் போகிறோமா என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை, இதுகுறித்தான அறிவிப்பை மிக விரைவிலேயே மய்யத்தின் தலைவர் அறிவிப்பார்.
போட்டியிடும் தொகுதிகளைப் பொறுத்தவரை எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் கமல் வெல்வார். தென்சென்னை, மதுரை, கோவை தொகுதிகளில் அவர் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்கவில்லை. அதேநேரம் எல்லா தொகுதிகளிலும் கட்டமைப்பை வலிமைப்படுத்தி வருகிறோம். கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் எங்கள் தலைவர் சென்னை திரும்பியதும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட இருக்கிறோம், பொறுத்திருங்கள்” எனச் சுருக்கமாக சொன்னவரிடம், `இந்தியா திரும்பியதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தான் செல்வார் என்ற விமர்சனம் எழுந்துள்ளதே?’ என வினவினோம் `` வாரத்தில் ஒருநாள் மட்டுமே அதற்காக ஒதுக்குகிறார் கமல், அந்நிகழ்ச்சியில் கமல் பங்கேற்பதும் கட்சிக்கு பலம்தான்” என முடித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/36ENhYR
0 Comments