திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக அமைந்துள்ளது திருப்பத்தூர் ஏரி. பறந்து விரிந்த இந்த ஏரியைச் சுற்றிக் கழிவுகளும், குப்பைகளும் காட்சியளிக்கின்றது. இதை அடுத்து ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் ஜானகி பொன்னுசாமி தொடக்க உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்த ஏரியை ஒட்டி அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் கிட்டத்தட்ட 50 மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்தப் பள்ளிக்கூடத்தைச் சுற்றி, சிவராஜ் பேட், கோவிலூர் போன்ற ஊர்கள் அமைந்துள்ளது.
ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் காரணமாக அவ்வழியாகச் செல்பவர்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்களும் வருவதாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகின்றார். மேலும், தலைமை ஆசிரியர், `வெகுகாலமாக இது இப்படித்தான் இருக்கு யார் சொல்லியும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாங்க எவ்வளவு முறை சொல்லியும் அது அப்படியே தான் இருக்கு... நாங்களும் விட்டுட்டோம்’ என வேதனை தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு நேரடியாகச் சென்று குப்பைகளையும் கழிவுகளையும் பார்த்த போது, நெகிழிப் பைகள் , கண்ணாடிக் குப்பைகள் மட்டுமல்லாமல், துர்நாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் நோயை உண்டாக்கும் மருத்துவக் கழிவுகளும், காய்கறி கழிவுகளும், பிராய்லர் கோழி கழிவுகளும் கொட்டிக்கிடந்தது. இது குறித்து அப்பகுதியில் விசாரித்த போது, ``நிறைய காலமாக இது இப்படியே தான் இருக்கு... நகராட்சியில் சொன்னா, அப்போது மட்டும் வந்து சுத்தம் செய்துவிட்டு போறாங்க” என்று கவலையுடன் கூறுகிறார்கள்.
மேலும், ``இரவு நேரங்களில் வந்து, பொதுமக்கள் யாரும் இல்லாத போது வந்து குப்பையைக் கொட்டி விட்டுச் செல்கின்றனர். இதை அவர்களிடம் ஏன் இங்கே கொட்டுகிறீர்கள் என்று கேட்டால், `நாங்கள் இங்கு தான் கொட்டுவோம்.. எங்களுக்குக் குப்பை தொட்டி கிடையாது’ என்று அலட்சியமாகப் பதில் சொல்கிறார்கள். இதற்கு முன்பு இந்த அளவுக்கு எல்லாம் குப்பைகள் கிடையாது, நிறையக் குப்பைத் தொட்டிகள் இருந்தன. இப்போது அவையெல்லாம் பழுதாகிவிட்டது என்பதற்காக நகராட்சியிலிருந்து எடுத்து விட்டார்கள். இதனால் தான் குப்பைகளை தொட்டியில் போட தொட்டி இல்லாமல் வெளியில் போடுகிறார்கள்” என்கிறார்கள்.
நீர்நிலை அருகே, பள்ளி கூடம் அருகிலேயே மருத்துவ கழிவுகளும், இறைச்சி கழிவுகளும், நெகிழி கழிவுகளும் கொட்டுவதால் வரும் ஆபத்துகளை சொல்லி அரசு புரிந்து கொள்ள வேண்டியது இல்லை. நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம். வாக்களித்த மக்களும் நம்புகிறார்கள்!
from India News https://ift.tt/uxLWlAU
0 Comments