விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் 13-ம் மாநில மாநாடு நேற்று (28-07-2023) தொடங்கியது. இதில் தமிழக இந்திய இம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது சி.பி.ஐ.மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "விவசாயத்தில் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளநிலையில் விவசாயத்துக்கென தனித்துறை உருவாக்க வேண்டும். கலைஞர் ஆட்சியில் இருந்ததுபோல விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்.
மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகப்படுத்தி, இத்திட்ட தொழிலாளர்களை விவசாய பணிகளிலும் ஈடுபடுத்த வேண்டும். இலவச வீட்டு மனை பட்டாவுடன் அருகே பயிர் சாகுபடிக்கு தேவையான நிலத்தையும் வழங்க வேண்டும். தீண்டாமை என்பது அரசியல் சாசன சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் இன்னும் வேங்கை வயல் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
பல இடங்களில் இரட்டை குவளை முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். நெற்கதிர்களை அறுவடை செய்யும் நேரத்தில் மூர்க்கத்தனமான முறையில் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்துவது ஏற்கதக்கதல்ல. அறுவடை முடியும் வரை அதிகாரிகள் காத்திருக்க வேண்டும்.
அண்ணாமலையின் யாத்திரையுடன் பா.ஜ.க. சரித்திரம் தமிழகத்தில் முடிவுக்கு வருகிறது. ராகுல் காந்தி நடத்திய யாத்திரைக்கும், அண்ணாமலை யாத்திரைக்கும் வித்தியாசம் உள்ளது. அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர். தனது செய்தி தினமும் வரவேண்டுமென அவர் விரும்புகிறார். இது விளம்பரத்திற்காக நடத்தும் யாத்திரை. இதனால் எந்த விளைவும் ஏற்பட போவதில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி என்பது உருவாக வாய்ப்பு இல்லை. அப்படி உருவாகினாலும் பாஜகவின் பி-டீம் ஆகத்தான் இருக்கும். எத்தனை அணி உருவானாலும் இந்தியா என்ற அணி தான் மகத்தான வெற்றி பெறும். நாடாளுமன்றத்திற்கு வராமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் மோடி இனி நாட்டிற்கு தேவையில்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
from India News https://ift.tt/DU0IZlt
0 Comments