சேர்மனுக்கு பதிலாக பதிலளித்த கணவர்; உடைக்கப்பட்ட மைக்; பரபர திண்டிவனம் நகர்மன்றக் கூட்டம்!

விழுப்புரம் மாவட்டத்தில், முக்கிய நகராட்சியாக இருந்து வருகிறது திண்டிவனம். மொத்தமாக 33 வார்டுகளைக் கொண்ட இந்த நகராட்சியில்... நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், 23 இடங்களைக் கைப்பற்றியது தி.மு.க. அதன்படி, நகராட்சி சேர்மன் பதவியையும் தன்வசப்படுத்தியது. 9-வது வார்டு கவுன்சிலரான நிர்மலா சேர்மனாக இருந்து வருகிறார். இவருடைய கணவர் ரவிச்சந்திரனும் 8-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை (28.07.2023) திண்டிவனம் நகராட்சியில் நகரமன்றக் கூட்டம் நடைபெற்றது. நகரமன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துவக்கம் முதலே வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து வார்டு வாரியாக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். 

உடைக்கப்பட்ட மைக்

அதற்கு நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி மற்றும் துறை அதிகாரிகள் பதிலளித்து வந்தனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் கேள்வி எழுப்பியபோது,  நகராட்சி அதிகாரிகள் சில கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருந்ததாக சலசலப்பு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த 23-வது அ.தி.மு.க கவுன்சிலர் ஜனார்த்தனன், தான் பேசிக் கொண்டிருந்த 'மைக்'-கை ஓங்கி தரையில் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஜனார்த்தனன் உட்பட நான்கு அ.தி.மு.க கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்... தெருவிளக்கு, குப்பை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், டென்டர்கள் குறித்தும் தி.மு.க கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். மேலும், "அதிகாரிகளாகிய நீங்கள் எழுந்து பதில் சொல்லுங்கள். நானும் மனிதன்தான், நீங்களும் மனிதர்கள்தான். இப்படி கேட்டால்தான் எழுந்து பதில் சொல்வீர்களா... மரியாதையை நாங்கள் கேட்டுதான் வாங்கணுமா... நீங்கள், கான்ட்ராக்டர்களுக்கு சாதகமாக இருக்க பார்க்கிறீர்களா... நீங்கள் கொடுத்திருக்கும் திட்ட அறிக்கையை படிப்பதற்கு அவகாசமே அளிக்காமல் கொடுத்திருக்கிறீர்கள். பராமரிப்பு என்று நிறைய வெத்து செலவுகள்தான் செய்யப்பட்டிருக்கிறது. வார்டுகளுக்கு குறைந்தது 10 லட்சம் ரூபாய் என்ற விதம் ஆக்கபூர்வமான பணிகளுக்கு நிதி ஒதுக்கப் பாருங்கள்" என்று ஒரு கவுன்சிலரை தொடர்ந்து மற்றொரு கவுன்சிலர் என அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். 

திண்டிவனம் நகரமன்றக் கூட்டம் - சேர்மன் நிர்மலா

அதற்கு சேர்மன் பதில் அளிப்பதற்கு பதிலாக, சேர்மனின் கணவர் ரவிச்சந்திரன் அவ்வப்போது பதில் அளித்தார். அப்போது கேள்வி எழுப்பிய 11-வது வார்டு பா.ம.க கவுன்சிலர் ஹேமமாலினி, "நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதே இல்லை. நகராட்சியில் வேலை செய்பவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள், சேர்மனும் இப்படித்தான் இருக்கிறார்கள். '1.5 வருடம் கழித்து இன்று சேர்மன் பேசியிருக்கிறார்' என்று மற்ற உறுப்பினர்களே சந்தோஷப்படுகிறார்கள். எதிர்க்கட்சியான எங்களுக்கு பதில் சொல்ல மாட்டீர்களா... அப்படி என்றால் பாகுபாடு பார்க்கிறீர்களா... 1.5 வருடமாக, சேர்மன் பேசியதை நாங்கள் பார்க்கவில்லை" என்றார். 

வாக்குவாதத்தில் கவுன்சிலர்கள்

அதற்கும் சேர்மனுக்கு பதிலாக பதிலளித்து பேசினார் சேர்மனுடைய கணவர் ரவிச்சந்திரன். அப்போது அவர் பேசியதை நகராட்சி அதிகாரிகள் கவனிக்காமல் பேசியதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், "ஏய்... இங்க பேசிகிட்டு தானே இருக்கேன். அப்புறம் என்ன குறுக்குல பேசுற நீ... சும்மா வெறுப்பேத்திக்குனு. ஒரு ஆள், பேசுனா கேளுங்க முதல்ல..." என ஆத்திரமடைந்து கத்தினார். இதுமட்டுமின்றி, தங்களது வார்டு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தொடர் சம்பவங்களால் திண்டிவனம் நகரமன்றக் கூட்டம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது.



from India News https://ift.tt/0FBcDY9

Post a Comment

0 Comments