மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்' பாதயாத்திரையை ராமநாதபுரத்தில் தொடங்கி வைத்தார். அண்ணாமலையின் இந்தப் பாதயாத்திரைக்காக, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பிரசார வாகனம் சென்னையிலிருந்து ராமநாதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தில்தான் அண்ணாமலை தனது பாதயாத்திரை முழுவதும் மக்களிடம் உரையாற்றவிருக்கிறார். முன்னதாக பாதயாத்திரை தொடங்குவதற்கு முன்புவரை, அந்தப் பிரசார வாகனத்தில் திருவள்ளுவரின் புகைப்படத்தில் தவறு இருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. அதாவது, திருவள்ளுவரின் வலது கையில் இருக்கவேண்டிய `எழுத்தாணி', அண்ணாமலையின் பிரசார வாகனத்தில் இடம்பெற்றிருந்த ஸ்டிக்கரில் இடது கையில் இருந்தது. இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, விமர்சனம் எழுந்தது.
அதையடுத்து பா.ஜ.க-வினர் உடனடியாக திருவள்ளுவர், கோபுரம், செங்கோல், ஜல்லிக்கட்டு என அந்த வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை முழுவதுமாக அகற்றினர். அவை அகற்றப்பட்ட பிறகே, அந்த வாகனம் பாதயாத்திரை பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
`` `திருவள்ளுவர் குறித்தும், திருக்குறள் குறித்தும் உள்நாட்டில் மட்டுமின்றி, உலக நாடுகளிலும் பிரதமர் பேசி வருகிறார்' என பெருமையாகக் கூறும் பா.ஜ.க-வினர், திருவள்ளுவரின் புகைப்படத்தை சித்திரித்து தவறாகப் பயன்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது" என அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
from India News https://ift.tt/8zaLIrZ
0 Comments