``திறனற்ற திமுக ஆட்சி; அரசு அதிகாரிகள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்!" - அண்ணாமலை கண்டனம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சட்டவிரோதமாக மண் கடத்திச் சென்றதை தடுத்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், ரசிங்கபுரம் தி.மு.க ஊராட்சி மன்றத்தலைவர் மகேஸ்வரனால் தாக்கப்பட்டார். இதில் பிரபாகரனுக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் வழிந்தோடியது. உடனே அவரை கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்திருக்கிறார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிகிச்சையில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன்

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வருவாய்த்துறை ஆய்வாளர் தாக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செம்மண் அள்ளிய தி.மு.க-வினரைத் தடுத்த துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தி.மு.க தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகளான மணி, தனபால் ஆகியோர் கல்லைக் கொண்டு கடுமையாகத் தாக்கி, கொல்ல முயன்றுள்ளனர்.

பொதுமக்களால் மீட்கப்பட்ட பிரபாகரன், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திறனற்ற தி.மு.க ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொல்லப்படுவதும், கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கிறது. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க இயலாத கையாலாகாத அரசாக இருக்கிறது தி.மு.க அரசு.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்

மணல் கொள்ளையில் ஈடுபடும் தி.மு.க-வினரை, கட்சியிலிருந்து நீக்குவதாகக் கண்துடைப்பு நாடகமாடி விட்டு, ஓரிரு மாதங்களில் பின் வாசல் வழியாக மீண்டும் கட்சியில் இணைத்து சட்டம் ஒழுங்கை கேலிக்குள்ளாக்குகிறது தி.மு.க. மணல் கொள்ளையர்களால் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க வேண்டியதும், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதும் தமிழக அரசின் கடமை" எனப் பதிவிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/JICDOzF

Post a Comment

0 Comments