`கமிஷனராக இருந்தவர், கான்ஸ்டேபிளாகியதுபோல்...' - பட்னாவிஸைச் சாடிய சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 22 எம்.எல்.ஏ-க்களும், 9 எம்.பி-க்களும் மிகவும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் சேர ஆர்வமாக இருப்பதாகவும் செய்தி வெளியானது. இது குறித்து உத்தவ் தாக்கரேயின் கட்சி பத்திரிகையான சாம்னாவிலும் செய்தி வெளியானது. இது பற்றி கருத்து தெரிவித்திருந்த மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவினர் அனைவரும் அதிருப்தியில் இருக்கின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத், "தேவேந்திர பட்னாவிஸிடம் சென்று எப்படி திருப்தியாக இருக்கிறீர்கள் என்று கேளுங்கள். முதல்வராக பதவியேற்க இருந்தவர்.

திடீரென அவரை தடுத்து நிறுத்தி தன்னைவிட ஜூனியரிடம் துணை முதல்வராக பதவியேற்கும்படி செய்துள்ளனர். அப்படிப்பட்டவரால் திருப்தியாக இருக்க முடியுமா? கமிஷனர் பதவியிலிருந்து கான்ஸ்டேபிளாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் மிகவும் அதிருப்தியில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ். மிகவும் சோகமானவர். பட்னாவிஸே அதிருப்தியில் இருக்கிறார். அப்படி இருக்கும்போது மற்றவர்களின் அதிருப்தியைப் பற்றி அவரால் என்ன சொல்ல முடியும். அவர் முகத்தைப பாருங்கள். மிகவும் சோகமான மனிதரைப்போல் இருக்கிறார். எங்களது கட்சியில் உத்தவ் தாக்கரே தலைமையில் அனைவரும் திருப்தியுடன் இருக்கிறோம்.

எங்களது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக்கொள்வோம். கட்சியிலிருந்து செல்ல விரும்பியவர்கள் சென்றுவிட்டனர். சென்ற இடத்தில் அவர்கள் இப்போது அமைதியாக இருக்கவேண்டும். நாங்கள் எங்கள் கட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உத்தவ் தாக்கரே தலைமையில் திருப்தியாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிருப்பதால், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் முதல்வர் ஷிண்டே ஈடுபட்டுள்ளார். இதற்காக சாக்கா பிரமுக் எனப்படும் கட்சியின் உள்ளூர் தலைவர்களை தனது பக்கம் இழுக்கும் வேலையில் ஷிண்டே தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார்.



from India News https://ift.tt/muHq9yL

Post a Comment

0 Comments