தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க., அ.தி.மு.க அங்கம் வகிக்கின்றன. ஆனால், இவ்விரு கட்சிகளுக்குமிடையே வார்த்தைப் போர்கள் தொடர்கதையாக இருந்துவருகின்றன. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சுகளும், அதற்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து வந்த எதிர்க்கருத்துகளும், `அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் பிளவு ஏற்படப் போகிறது' என்ற பேச்சுகளுக்கு வழிவகுத்தன. அண்ணாமலைகூட, `அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ஜ.க வளராது, பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்' என்று கட்சித் தலைவர்களிடம் பேசியதாகக் கூறப்பட்டது. அதன் பிறகு, `கூட்டணி குறித்து அறிவிக்கும் உரிமை எனக்கு இல்லை, டெல்லி தலைமையே அதை முடிவுசெய்யும்' என அண்ணாமலை விளக்கமளித்தார். இத்தகைய சூழலில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ‘தமிழ்நாட்டில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க நீடிப்பதாக’ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க - அ.தி.மு.க உறவில் விரிசல் எனக் கூறப்பட்ட நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சியில் பேசும்போது அமித் ஷா, `அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் பா.ஜ.க இருக்கிறது' என உறுதிபடச் சொன்னார். `தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் கட்டமைப்பு வலுவாக இல்லை. அதை மேம்படுத்த உழைத்துவருகிறோம். தொலைதூர கிராமங்களையும், வாக்குச்சாவடிகளையும் பா.ஜ.க எட்டியிருக்கிறது. நாங்கள் வலு குறைவாக இருக்கும் இடங்களில் கூட்டணிக் கட்சிகள் கைகொடுக்கும். அந்த வகையில், அ.தி.மு.க கூட்டணியில் நீடிக்கிறோம்' என்று அமித் ஷா குறிப்பிட்டார். பா.ஜ.க-வின் அதிகார மையமாக இருக்கும் அமித் ஷா, அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணி என உறுதிசெய்திருப்பது அரசியல் அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது.
நிலைமை இவ்வாறு இருக்க மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க மாநில முன்னாள் தலைவருமான எல்.முருகன், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இது தொடர்பாக டெல்லி வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “தமிழக பா.ஜ.க-வில் நடக்கும் சில விஷயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது. ஏற்கெனவே கிருஷ்ணகிரி வந்திருந்தபோது ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நல்ல முறையில் நடப்பதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். எல்லோரிடமும் பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்ளுங்கள்' எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் சொல்லி அடுத்தடுத்த நாள்களிலேயே அண்ணாமலையின் பேச்சுகள் கூட்டணிக் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தின. இதையடுத்து டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்த அண்ணாமலைக்கு, சில அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அதன் பிறகே தமிழகம் வந்த அண்ணாமலை ‘கூட்டணி குறித்து மேலிடம்தான் முடிவுசெய்யும்’ எனத் தெரிவித்தார். இவ்வாறாக தமிழக அரசியல் சூழலில், பா.ஜ.க கூட்டணி நிலவரம் பற்றியும், அதன் இப்போதைய போக்குகள் குறித்தும் இருவரின் சந்திப்பில் பேசப்பட்டிருக்கிறது. அதோடு தமிழக பா.ஜ.க-வில் நடந்துவரும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்தும் கேட்டறிந்திருக்கிறார் நட்டா. சமீபத்தில் பா.ஜ.க நிர்வாகியாக இருந்தவரின் கைது. அந்த விசாரணையில் ஏதேனும் பா.ஜ.க பிரமுகர்கள் சிக்கினால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதோடு, கடந்த மார்ச் 29-ம் தேதி, மத்திய அமைச்சர் கிசன் ரெட்டி, கோவை, ஈரோடு, தென் சென்னை ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது பற்றியும் விவாதித்திருக்கின்றனர்” என்கிறார்கள்.
from India News https://ift.tt/VFRX7vT
0 Comments