அண்ணாமலைக்கும், எங்களுக்கும் எந்தத் தகராறும் இல்லை. அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி தொடரும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களை இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "சம்பிரதாய அடிப்படையில் உள்துறை அமைச்சர், ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேசினோம்.
ஐந்து மாதத்துக்கு முன்பு சந்தித்துப் பேசினோம். அதேபோலத்தான் இந்த முறையும் சந்தித்துப் பேசியிருக்கிறோம். 2019 தேர்தல், இடைத்தேர்தல் என பா.ஜ.க-வுடனான அ.தி.மு.க கூட்டணி தொடர்ந்துவருகிறது. இந்தத் தேர்தலிலும் தொடரும். பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும், எங்களுக்கு எந்தத் தகராறும் இல்லை. தொடர்ந்து எங்களுக்குள் விரிசலை உண்டாக்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய கட்சிகள்.
தி.மு.க கூட்டணிக் கட்சிகள்போல அடிமைக் கட்சிகள் இல்லை. தி.மு.க செய்யும் தவறுகளைச் சட்டமன்றத்திலும், வெளியிலும் அவர்களது கூட்டணிக் கட்சிகள் தட்டிக் கேட்பதில்லை. முதன்முறையாக 12 மணி நேர வேலை சட்ட மசோதா குறித்துப் பேசி வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். ஒ.பி.எஸ் மாநாடு நடத்தியது குறித்து அவரிடம்தான் கேள்வி கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவில், ரூ.30,000 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டதாகவும், அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறோம்.
சி.ஏ.ஜி அறிக்கையில் ஊழல் குறித்துக் குறிப்பிடவில்லை. அதில் அ.தி.மு.க ஆட்சியில் நிதிகளை முறையாகப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் அரசின் எந்தச் செயல்திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. அதனால் நிர்ணயித்த இலக்குகளை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், தி.மு.க அரசு கொரோனா தொற்று முடிவுற்று, ஆட்சி பொறுப்பேற்றாலும் ரூ.28,000 கோடி நிதியைச் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பியிருக்கிறது.
எங்கள் ஆட்சியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாமே... கொடநாடு விவகாரம் அ.தி.மு.க ஆட்சியில் நடந்தது. அதைக் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுத்து, கைதுசெய்து, சிறையில் அடைத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அ.தி.மு.க ஆட்சியில்தான். ஆனால், ஆட்சி மாற்றம் நடந்ததற்குப் பிறகு, கேரளாவைச் சேர்ந்த கொடூர வழக்குகளில் தொடர்புடைய கொடநாடு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியது எம்.பி இளங்கோவன். அவர்களை ஜாமீனில் எடுத்தது முதல்வர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தி.மு.க பிரமுகர்.
கொடநாடு வழக்கில் என்ன நடந்தது எனத் தெரியவேண்டுமென்றால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தி.மு.க உடந்தையாக இருப்பதன் மர்மம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். தி.மு.க-வின் `பி’ டீமான செயல்படுகிறார் ஓ.பி.எஸ். உண்மையில் விசுவாசமான தொண்டர்கள் யார் திரும்பி வந்தாலும், எங்கள் கட்சியில் இணைத்துக்கொள்வோம்.
ஆனால், துரோகிகளுக்கு மட்டும் இடமில்லை. அவர்கள் யார் என உங்களுக்கே தெரியும். நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பொதுக்குழுவின் முடிவு. எங்கள் கட்சி பொதுக்குழுவின் அடிப்படையில்தான் செயல்படுகிறது. தமிழ்நாடு நிதியமைச்சர் ஆடியோ குறித்து ஸ்டாலின் ஏன் இதுவரை வாய்திறக்கவில்லை. இது ஸ்டாலின் குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரம்... இதில் முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்காதது ஏன்?" எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
from India News https://ift.tt/Xhu9Nt8
0 Comments