பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி; உடலை தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ் - பாஜக கண்டணம்!

மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், சிறுமியின் உடலை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா

சிறுமியின் உடலை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதற்கிடையே, மேற்கு வங்க காவல்துறையை பா.ஜ.க தலைவர்கள் கடுமையாகச் சாடிவருகினறனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா, "உத்தர் தினாஜ்பூரின் கலியாகஞ்சில் உள்ள ராஜ்போங்ஷி சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலை மேற்கு வங்க காவல்துறை உணர்ச்சியற்ற முறையில் இழுத்துச் செல்கிறது.

இதன் மூலம் ஆதாரங்களை அகற்றிக் குற்றத்தை மறைக்கும் நோக்கத்தில் அவர்கள் செயல்படுவதாகத் தெரிகிறது” என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பாதிக்கப்பட்டவரின்  குடும்பத்தைப் பார்க்க பா.ஜ.க தலைவர்கள் யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்  தலைவர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, ``மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை அவமானப்படுத்தியதாக காவல்துறைமீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. சிறுமிக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இன்று அங்கு சென்று விசாரணை நடத்தவிருக்கிறேன். இது குறித்த தகவல் மாநில அரசுக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்த பதிலும் வரவில்லை” என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் விசாரனை களத்தில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/Y8Vk4oI

Post a Comment

0 Comments