தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரைச் சந்தித்த கெளதம் அதானி; `திடீர் மீட்'டின் அரசியல் பின்னணிஎன்ன?

மகாராஷ்டிராவில் 15 நாள்களில் இரண்டு குண்டுகள் வெடிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே கூறியிருக்கிறார். இந்த நேரத்தில், சரத் பவாரை தொழிலதிபர் அதானி சந்தித்திருக்கிறார். மும்பையிலுள்ள சரத் பவாரின் ‘சில்வர் ஓக்’ இல்லத்துக்கு (ஏப்ரல் 20-ம் தேதி) சென்றார் கௌதம் அதானி. அங்கு, சரத் பவார் - அதானி இடையிலான சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதானி

சரத் பவாரின் உறவினரான அஜித் பவார் பா.ஜ.க-வுடன் கைகோக்கப்போகிறார் என்று ஊடகங்களில் ஊகச் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நேரத்தில், இப்படிப்பட்ட சந்திப்பு நிகழ்ந்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இந்தச் சந்திப்பு பல சந்தேகங்களையும் கிளப்பியிருக்கிறது.

அதானி குழுமம் பல்வேறு மோடிசகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் ஆதாரங்களுடன் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அதானியைக் கடுமையாக விமர்சித்தன. தொழிலதிபர் அதானிக்கும் பிரதமர் மோடிக்குமான தொடர்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மோடியும் அதானியும் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படத்தையும் நாடாளுமன்றத்தில் காண்பித்தார் ராகுல் காந்தி. அவ்வளவு கடுமையாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானியை எதிர்த்துவரும் நிலையில், அதானியை சரத் பவார் ஆதரித்தே வந்தார்.

சரத் பவார்

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கியமான கோரிக்கை. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்றார் சரத் பவார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகியவற்றுடன் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது. இந்தச் சூழலில், சரத் பவாரும் கௌதம் அதானியும் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதானி விவகாரத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருபவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா. அவர், சில நாள்களுக்கு முன்பு தெரிவித்த ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. அதாவது, “நண்பர்கள் மூலமாக என்னையும் வேறு சிலரையும் தொடர்புகொள்ள கௌதம் அதானி முயற்சி செய்தார். ஆனால், முடியவில்லை” என்று மஹுவா மொய்த்ரா கூறியிருந்தார்.

அந்த ‘சிலரில்’ ஒருவராக சரத் பவார் இருந்திருக்கிறார் என்பது இந்தச் சந்திப்பின் மூலம் தெரியவருகிறது. அவர்களின் சந்திப்புக்குப் பிறகு கருத்து தெரிவித்த மஹுவா மொய்த்ரா, ‘எந்தவொரு அரசியல்வாதியும் தொழிலதிபர் அதானியைச் சந்திக்கக் கூடாது’ என்று கூறியிருக்கிறார்.

மஹுவா மொய்த்ரா

`அதானயுடன் ‘ஒன் டு ஒன்’ அடிப்படையில் விவாதிப்பதற்கு எதுவுமில்லை. ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றச்சாட்டின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்காத வரையில் எந்தவோர் அரசியல்வாதியும் அதானியைச் சந்திக்கக் கூடாது' என்கிறார் மஹுவா மொய்த்ரா. மேலும், அதானியைச் சந்தித்ததற்காக சரத் பவாரை அவர் விமர்சித்திருக்கிறார்.

மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். முன்னதாக காங்கிரஸ் கட்சி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அங்கு நடைபெற்றது. திடீரென, சிவசேனாவை உடைத்துக்கொண்டு வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, மாநில முதல்வரானார். அந்த ஆட்சி மாற்றத்துக்கு முன்பாக அதானி, சரத் பவார் இடையே சந்திப்பு நிகழ்ந்தது.

ஏக்நாத் ஷிண்டே

தற்போது உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால், அடுத்து யார் ஆட்சியமைப்பது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில்தான், பா.ஜ.க-வுடன் சேர்ந்து ஆட்சியமைக்க அஜித் பவார் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இப்படியான சூழலில் அதானி, சரத் பவார் இடையே சந்திப்பு நிகழ்ந்திருப்பது பல்வேறு ஊகங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது.

இவர்களின் சந்திப்புக்கும் மகாராஷ்டிரா மாநில அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் சம்பந்தம் இருக்கும் என்றும் பேசப்படுகிறது. மேலும் இந்தச் சந்திப்பின்போது, ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்துக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் பற்றியும், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் அதானி குழுமத்துக்கு எதிராக எழுந்திருக்கும் அழுத்தம் பற்றியும் நிச்சயம் அவர்கள் விவாதித்திருப்பார்கள் என்கிறார்கள்.



from India News https://ift.tt/AU4fqpC

Post a Comment

0 Comments