மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா கொண்டாட்டம் டெல்லியில் நடந்துவருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``சி.பி.ஐ போன்ற தொழில்முறை மற்றும் திறமையான நிறுவனங்கள் இல்லாமல் இந்தியா முன்னேற முடியாது. வங்கி மோசடிகள் முதல் வனவிலங்குகள் தொடர்பான மோசடிகள் வரை, சி.பி.ஐ-யின் செயல்பாடு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் சி.பி.ஐ-யின் முக்கிய பொறுப்பு ஊழலற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதுதான்.
கடந்த 60 ஆண்டுகளில் சி.பி.ஐ பல்வேறு பரிணாமங்களைச் சந்தித்து, ஒழுங்கு விசாரணை நிறுவனமாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது. 2014-ம் ஆண்டிலிருந்து, நமது முதன்மையான குறிக்கோள், நாட்டின் அமைப்பின்மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதும், பலப்படுத்துவதும்தான் என முடிவுசெய்யப்பட்டது. இதில் சி.பி.ஐ-க்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஜனநாயகம் மற்றும் நீதிக்கான மிகப்பெரிய தடை ஊழல். இதுவே வாரிசு அரசியல் வளர்வதற்கும் காரணம்.
ஊழலிலிருந்து இந்தியாவை விடுவிப்பதே சி.பி.ஐ-யின் முக்கியப் பொறுப்பு. 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிக ஊழல் செய்வதில் போட்டி நிலவியது. பெரிய ஊழல்கள் செய்தவர்கள் அச்சமின்றி இருந்தனர். 2014-க்குப் பிறகு ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிரான செயல்பாட்டை நாம் மேற்கொண்டிருக்கிறோம். ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது... இதுவே நாட்டின், அதன் குடிமக்களின் விருப்பம். கறுப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு `மிஷன்' முறையில் தொடங்கியிருக்கிறது. ஊழல்வாதிகளைத் தவிர, ஊழலுக்கு எதிராகவும் நாம் போராடுகிறோம்.
சி.பி.ஐ தனது பணியின் மூலம் மக்களுக்கு நம்பிக்கை அளித்துவருகிறது. எனவே, சி.பி.ஐ அதிகாரிகளுக்கு அரசின் முழு ஆதரவு இருப்பதால் ஊழலை ஒழிக்கத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். உங்கள்மீதும், எங்கள்மீதும் தாக்குதல்கள் இருக்கும்... ஆனாலும், அரசியல் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடருவோம்" என்றார்.
from India News https://ift.tt/jSCGMfu
0 Comments