தொட்டபெட்டா: விதிகளை வளைத்து உறவினருக்கு கடை அமைத்து கொடுத்தாரா சுற்றுலாத்துறை அமைச்சர்?!

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,600 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் தொட்டபெட்டா சிகரம் ஊட்டியின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்லும் தொட்டபெட்டா காட்சிமுனையை, சுற்றுலாத்துறை நிர்வகித்தாலும், அடர்ந்த வனத்துக்குள் அமைந்திருப்பதால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பில் வனத்துறையும் இணைந்து ஈடுபட்டு வருகிறது.

தொட்டபெட்டா

தொட்டபெட்டாவின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் காட்சிமுனை வளாகத்துக்குள் தனியார் கடைகளை நடத்த அரசு சார்பில் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. பயணிகளின் தேவைக்காக சுற்றுலாத்துறை மூலம் ஓர் உணவகம் மட்டும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ராமச்சந்திரன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னுடைய உறவினர் ஒருவருக்கு ஆவின் பால் பூத் என்ற பெயரில் கடை நடத்த அனுமதி பெற்றுக் கொடுத்திருக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதுவும் அந்தக் கடை அமைப்பதற்காக காட்சிமுனையின் ஒருபகுதியை மறைக்கும் வகையில், கட்டுமானம் நடைபெற்று வருவதாக நமக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு நேரில் சென்று விசாரித்தோம்.

காட்சிமுனையிலிருந்து குன்னூரைக் கண்டு ரசிக்கக்கூடிய இடமான `குன்னூர் வியூபாயின்ட்' என வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை துணியால் மூடிமறைத்திருந்தனர். வியூபாயின்டை மறைக்கும் வகையில், அதன் அருகிலேயே கடைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்க்க முடிந்தது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

அங்கிருந்தவர்களிடம் பேச்சு கொடுத்ததில், நம்மிடம் புலம்பிய சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர், ``ஆங்கிலேயர் ஆட்சி முதல் தற்போதுவரை காட்சிமுனைக்குள் தனியார் கடைகள் நடத்த அனுமதி கிடையாது. இந்தக் கட்டுப்பாட்டை முதன் முறையாக தகர்த்து தன்னுடைய உறவினருக்குக் கடை வைத்துக்கொடுக்கும் வேலையைச் செய்திருக்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன். கடை அமைக்க வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை என இரண்டு துறையும் தடையில்லாச் சான்று கொடுக்க வேண்டும். இதில் பியூட்டி என்னவென்றால் வனத்துறை அமைச்சராக இருந்தபோது ஃபாரஸ்ட் அனுமதியும் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவிக்கு வந்ததும் டூரிசம் அனுமதியையும் தனது செல்வாக்கை வைத்து ஈஸியாக வாங்கிவிட்டார்.

ஆவின் பாலகம் என்ற பெயரில் பிரியாணிக்கடை நடத்த ஏற்பாடுகள் செய்த வருகின்றார்கள். அரசுக்கு கிடைத்து வந்த மொத்த வருவாயும் தனது உறவினருக்கு மடை மாறுவதோடு இவர்கள் வைப்பதுதான் விலை என்பதால் அமைச்சர் தீவிரம் காட்டி வருகிறார். தனியார் கடைகளுக்கான அனுமதி போக்கு அதிகரித்தால் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் தொட்டபெட்டாவின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் " என்றார் ஆதங்கத்துடன்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசினோம், " எனது உறவினருக்கு கடை வைக்க அனுமதி பெற்றது உண்மைதான். அதில் என்ன தவறு இருக்கிறது. ஏற்கனவே பெற்ற அனுமதியை வைத்து தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது" என வேறு எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் முடித்துக் கொண்டார்.

மறைக்கப்பட்ட காட்சி முனை

இது குறித்து பேசிய உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன், " சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கூடும் மலையுச்சியில் ஆவின் பாலகம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன. காப்புக்காடு என அறிவிக்கப்பட்டுள்ள ரிசர்வ் ஃபாரஸ்ட் பகுதியில் எந்தவிதமான புதிய கட்டுமானங்களையும் ஏற்படுத்தக்கூடாது என சட்டம் இருக்கிறது. அமைச்சர் என்று பாராமல் இதை தடுக்கும் நடவடிக்கையில் மாவட்டம் நிர்வாகம் இறங்க வேண்டும். இல்லையென்றால் இது மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் " என்றார்.

இந்த மலையையும் மக்களையும் பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. அழித்து விடாதீர்கள் அமைச்சரே என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.



from India News https://ift.tt/cPVAKUC

Post a Comment

0 Comments